அதிகரித்துவரும் காவல் கொட்டடி மரணங்கள்!
திமுக ஆட்சிக்கு அந்த பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து 24 காவல் கொட்டடி மரணங்கள் (custodial deaths) நிகழ்ந்துள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது போலீஸார் கடுமையாக தாக்கியதால் அஜித்குமார் (27) என்ற இளைஞர் கடந்த ஜீன் 28ஆம் தேதி (சனிக்கிழமை) உயிரிழந்தார்.
திருப்புவனம் காவல் நிலையத்தை அஜித்குமாரின் உறவினர்களும் அவரது சொந்த ஊரான மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, நீதிபதி வேங்கட பிரசாத் ஞாயிற்றுக்கிழமை இது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர், இதில் சம்பந்தப்பட்ட ஆறு காவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளிவானது. அந்த அறிக்கையில் அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், ரத்தக் கசிவு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் காவல் கொட்டடி மரணங்கள் என்பது தொடர்ந்து நடந்து வரும் ஒன்றாக மாறியிருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜீன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவலர்கள் தாக்கியதால் இறந்து போனது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இதற்கு எதிரான கடும் கண்டனம் தெரிவித்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு அந்த பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து 24 காவல் கொட்டடி மரணங்கள் (custodial deaths) நிகழ்ந்துள்ளன. அதில் செங்கல்பட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனின் மரணமும் உள்ளடங்கும். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அரசு கண்காணிப்பு இல்லத்தில் இருந்த அந்த சிறுவனின் உடலில் 95 காயங்கங்கள் இருந்தது உடற்கூறாய்வில் தெரியவந்தது. இது அந்த சிறுவன் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதை காட்டுகிறது. அந்தவகையில் தற்போது அஜித் குமாரின் மரணம் 25ஆவது மரணமாகும்.

இந்திய அளவில் எடுத்துக்கொண்டாலும் கூட காவல் கொட்டடி மரணங்கள் என்பது கவலை அளிக்கும் வகையில் அதிகமானதாக இருக்கிறது. 2001 முதல் 2020 வரையிலான 20 ஆண்டுகளில், இந்தியா முழுவதும் 1,888 காவல் கொட்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் வருடாந்திர குற்ற அறிக்கைகள் மூலமாக தெரியவருகிறது. ஆனால், இதில் 893 காவலர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 358 காவலர்கள் மீது மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வெறும் 26 காவலர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது நாடாளுமன்ற கொடுக்கும் புள்ளிவிவரங்களும் மேற்குறிப்பிட்டுள்ள நிலவரத்தையே காட்டுவதாக இருக்கிறது. 2017-18 முதல் 2022-23 வரை தமிழ்நாடு முழுவதும் 36 மரணங்கள் சிறை மற்றும் காவல் கொட்டடிகளில் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது. 2016-17 முதல் 2021-22 வரையிலான ஐந்தாண்டுகளில் காவல் கொட்டடி மரணங்கள் தொடர்பாக தமிழ்நாட்டில் 39 நீதித்துறை விசாரணைகள் நடந்துள்ளது. ஆனால், அதில் ஒரு காவலர் மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று ’The Hindu’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் கொட்டடி மரணங்கள் மட்டுமல்ல வேறு வழிகளிலும் காவல்துறையின் சட்டத்தை மீறிய போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டுமே புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட கைதிகளில் 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கை கால்களை உடைத்து, காயப்படுத்தி அனுப்பி உள்ளது தெரியவருகிறது. காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததால் ஏற்பட்ட காயம் என்று இதனை மறைக்கும் வகையில் சப்பைக்கட்டு கட்டியது காவல்துறை. இதனை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏன் காவல் நிலைய கழிவறையில் கைதிகள் மட்டுமே வழுக்கி விழுகிறார்கள், காவலர்கள் யாரும் வழுக்கி விழுவதில்லை என்று காவல்துறை நோக்கி கேள்வி எழுப்பியது உயர்நீதிமன்றம்.

மேலும் 2021ஆம் ஆண்டிலிருந்து 21 எண்கவுண்டர்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஏற்கனவே நமது ‘You Turn’ தளத்தில் கட்டுரை எழுதியுள்ளோம்.
காவல்துறையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைகள் குறிப்பாக ஏழை, விளிம்புநிலை மக்கள் மீதுதான் பாய்கிறது. தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் மட்டும் 1,775 நபர்கள் எவ்வித விசாரணையும் இல்லாமல் கைது செய்து கஸ்டடியில் வைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற தரவுகள் தெரிவிக்கிறது. அதில் 37% நபர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால், தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தின் மக்கள்த்தொகை 20% மட்டுமே. இது காவல்துறையால் விளிம்புநிலை சமூக மக்கள் பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே நிலைதான். அரசுசாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 2019ஆம் ஆண்டு மட்டுமே 1,731 காவல் கொட்டடி மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்ததாக குறிப்பிடுகிறது. அதாவது ஒரு நாளுக்கு ஐந்து மரணங்கள் வீதம் நிகழ்ந்துள்ளது. இந்த அறிக்கை காவல்துறை கைது செய்தவர்களை சித்ரவதை செய்வதற்கு கையாளும் பல்வேறு வழிமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. மேலும், சந்தேகத்திற்குரிய நபர்களை அடித்து சித்ரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பது என்பது இந்திய காவல்துறையில் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதாக கூறுகிறது.
இவையெல்லாம், காவல் கொட்டடி மரணங்கள் என்பது ஏதோ தனித்த நிகழ்வுகள் அல்ல என்பது காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.