எதிர்காலத்தில் Y குரோமோசோமின் நிலை என்ன?
தொடக்க காலத்தில் 1500 மரபணுக்களை கொண்டதாக இருந்த Y குரோமோசோம் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் பெரும்பாலான மரபணுக்களை இழந்து சுருங்கி வந்திருக்கிறது.
மனிதனின் ஒவ்வொரு உயிரணுவிலும் (Cell) மொத்தம் 46 குரோமோசோம்கள் 23 ஜோடிகளாக (Pairs) இருக்கும். அதில் 22 ஜோடிகள் (அதாவது 44 குரோமோசோம்கள்) ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் பொதுவானது. மீதமிருக்கும் அந்த ஒரு ஜோடி குரோமோசோம் தான் மனிதனின் பால் வகைமையை (Sex) தீர்மானிக்கும் மரபணுக்களை (Genes) கொண்டிருக்கும். அதனால் தான் இதனை பால் குரோமோசோம் (Sex Chromosome) என்று அழைக்கின்றனர்.
இதில் XX என்று இருந்தால் பெண் பால், XY என்று இருந்தால் ஆண்பால். இந்த வகையில் ஆண் உடலில் பால் உறுப்பு வளர்வதற்கும், ஆண் தன்மைக்கு (Maleness) தேவையான ஹார்மோன்கள் சுரப்பதற்கும் இன்றியமையாத காரணியாக இருப்பது Y குரோமோசோம் தான். குறிப்பாக அதில் உள்ள ‘SRY gene’ என்ற மரபணு தான்.
இந்த Y குரோமோசோம் X குரோமோசோமுடன் ஒப்பிடுகையில் சிறியதாக இருக்கும். காரணம் பரிணாம வளர்ச்சிப் போக்கில் இது குறிப்பிடத்தக்க வகையில் சுருங்கி வந்திருக்கிறது.
ஏன் Y குரோமோசோம் சுருங்கி வருகின்றது?
உயிரணுவில் இருக்கும் மற்ற 22 ஜோடிகளில் உள்ள குரோமோசோம்கள் ஒன்று மற்றொன்றுடன் தனது மரபணு வரிசைகளை (nucleotide sequences) மாற்றிக் கொள்கின்றன. இவ்வாறு ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு குரோமோசோம்கள் தங்களது மரபணு வரிசைகளை மாற்றுக் கொள்ளும் நிகழ்முறைக்கு ‘Homologous Recombination’ என்று பெயர்.

மரபணுக்களின் (Genes) உறைவிடமாக குரோமோசோம்கள் இருக்கிறது. இந்த மரபணுக்களில் ஏதேனும் 'சடுதி மாற்றம் (Mutation)' ஏற்பட்டால், அந்த மரபணு மூலமாக பெறப்படும் 'புரதங்களின்' வழியாக உடலில் நடக்கும் செயல்பாடுகள் தடைபடும். இதனால் உயிரை அச்சுறுத்தக்கூடிய நோய்கள் கூட ஏற்படலாம். இந்த நோய்க்கூறு உடைய 'சடுதி மாற்றமடைந்த மரபணுவை (Mutant Gene)' நீக்குவதில் 'Homologous recombination' என்ற இந்த நிகழ்முறைக்கு பெரும் பங்கு இருக்கிறது.
ஆனால் இந்த X மற்றும் Y குரோமோசோம்களுக்கு இடையில் இவ்வாறு மரபணு வரிசைகளை மாற்றிக் கொள்ள முடியாது. ஏனெனில், ஆண்பால் தன்மையை தீர்மானிக்கும் முக்கிய மரபணுக்களை மற்ற குரோமோசோம்களுக்கு அவ்வாறு மாற்ற முடியாது.

பெண்பாலில் இரண்டு X குரோமோசோம்கள் இருப்பதால் அதனால் மரபணு வரிசைகளை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் Y குரோமோசோமால் அவ்வாறு செய்ய முடியாது. இதனால் Y குரோமோசோமில் ஏற்படும் மரபணு சடுதி மாற்றங்களை 'Homologous recombination' மூலமாக சரி செய்ய முடியாது. இவ்வாறு உயிரை அச்சுறுத்தல் செய்யாத (Non Lethal Mutations) மரபணு சடுதி மாற்றத்திற்கு உள்ளான மரபணு வரிசைகள் Y குரோமோசோமில் தங்கிவிடுகின்றன. இதுபோன்ற எவ்வித பயனுமற்ற மரபணுக்கள் (Junk Genes) காலப்போக்கில் குரோமோசோமில் இருந்து துண்டிக்கப்படுகின்றன. இதனால் தான் Y குரோமோசோம் காலப்போக்கில் சுருங்கி வந்திருக்கிறது.
குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடையாத தொடக்க காலத்தில், 1500 மரபணுக்களை கொண்டதாக இருந்த Y குரோமோசோம் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் பெரும்பாலான மரபணுக்களை இழந்துவிட்டது. இப்போது Y குரோமோசோமில் வெறும் 50 மரபணுக்களுகான வரிசைகள் தான் இருக்கின்றன. அதில் 27 மட்டுமே ஆண்பாலுக்கே உரிய பிரத்யேக மரபணுகள் ஆகும்.
இப்படி சுருங்கிக்கொண்டே செல்லும் Y குரோமோசோம் எதிர்காலத்தில் என்னவாகும் என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் இரண்டு விதமான பதில்களை முன்வைக்கிறார்கள்.
ஒன்று, இந்த விகிதத்தில் Y குரோமோசோம் சுருங்கிக்கொண்டே சென்றால் இன்னும் 4.5 மில்லியன் ஆண்டுகளில் அது இல்லாமல் அழிந்துவிடும் என்று ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் உணவை கொறித்து உண்ணும் சில பாலூட்டிகளில் (Rodent Species) இவ்வாறு ஆண்பாலுக்கான குரோமோசோம் அழிந்து போயிருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேவேளையில், Y குரோமோசோமை இழந்த இந்த பாலுட்டிகளில், பால் தன்மையை தீர்மானக்கும் (New Sex Determining Gene) புதிய மரபணுக்கள் தோன்றிய உள்ளன. அதேபோல் மனிதர்களிடமும் தோன்றலாம்.

ஆனால் இந்த பால் தன்மையை தீர்மானிக்கும் புதிய மரபணு மூலம் இனப்பெருக்கம் செய்யும் மனிதர்களால் XY குரோமோசோம்களை உடைய மனித மரபினத்துடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்ய முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன் காரணமாக Y குரோமோசோம் அழிந்து போவது பற்றி முன்வைக்கும் ஆய்வாளர்கள் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளதாக சொல்கிறார்கள். ஒன்று, Y குரோமோசோம் அழிந்து போனால் பெண் பால் மட்டுமே இருந்து மனித இனத்தை பெருக்க முடியாது. அதனால் மனித இனம் அழிந்துவிடும். அல்லது XY குரோமோசோம்களை கொண்ட மனித மரபினம், பால் தன்மையை தீர்மானிக்கும் புதிய மரபணுவை பரிமாண வளர்ச்சியின் மூலமாக பெற்ற மரபினம் ஆகிய வெவ்வேறு மனித மரபினங்கள் அக்கம் பக்கமாக வாழ்வதாக இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் Y குரோமோசோம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளும் என்ற மற்றொரு பார்வையை சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். Y குரோமோசோமில் இதற்கு மேல் எவ்வித பயனுமற்ற மரபணுக்கள் (Junk Genes) தோன்ற முடியாத வகையில் ஒவ்வொரு மரபணுவும் ஆண் தன்மையை தீர்மானிப்பதில் முக்கியமானது என்ற கட்டத்தை அடையும் போது, Y குரோமோசோம் சுருங்குவதை நிறுத்திக்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த இரண்டு வழிகளில் எதுவாகினும் மனித இனம் பிழைத்து வாழும் என்ற நம்பிக்கை ஆய்வாளர்களின் கருத்தில் இருக்கிறது.