YouTurn

Turmeric vs Human parasites - என பரவும் காணொளி! உண்மை என்ன?

உண்மையில் அந்த காணொளியில் உள்ளது போல் ஆய்வு நடத்தப்பட்டதா? மஞ்சளுக்கு புழுக்களை கொல்லும் மகிமை உள்ளதா?

Turmeric vs Human parasites - என பரவும் காணொளி! உண்மை என்ன?

சமூக வலைதளத்தில் ஒரு காணொளி:

ஒரு ஆய்வகத்தில் வெள்ளை lab coat அணிந்த ஒருவர் புழுக்கள் நெளியும் ஒரு திரவத்தை microscope slideல் எடுத்துக்கொள்கிறார். பின் தண்ணீரில் மஞ்சளைக் கலந்து அந்தக்கலவையை புழுக்கள் இருக்கும் slideல் வைக்கிறார். மெதுவாக புழுக்கள் இருக்கும் திரவத்தோடு இந்த மஞ்சள் கலவை கலக்கின்றது. 5 நிமிடம், 15 நிமிடம் என ஒரு மணிநேரத்தில் புழுக்கள், புழுவின் வயிற்றில் இருக்கும் முட்டைகள் என அனைத்தும் மரணித்து சுருண்டு விடுகின்றன.


https://x.com/i/web/status/1855940846585065564


இந்த காணொளிக்கு மஞ்சளின் மகிமையைப் பார்த்தீர்களா? பாரம்பரிய மருத்துவத்தின் மகிமையைப் பார்த்தீர்களா என பல சிலாகிப்புகள்! உண்மையில் அந்த காணொளியில் உள்ளது போல் ஆய்வு நடத்தப்பட்டதா? மஞ்சளுக்கு புழுக்களை கொல்லும் மகிமை உள்ளதா? இதை புரிந்துகொள்ள மூன்று கேள்விகள் கேட்போம்.

 

1. அந்த காணொளி உண்மையில் ஒரு ஆய்வறிக்கையின் முடிவுகளை ஆதாரமாக வைத்து  உருவாக்கப்பட்டதா??

2. அந்த காணொளியில் உள்ளது போல் தான் ஆய்வுகள் நடத்தப்படுமா?

3. மஞ்சளுக்கு antihelmintic effect (நோய் உண்டாக்கும் புழுக்களை கொல்லும் அல்லது முடக்கும் தன்மை) உள்ளதா?

 

இந்த மூன்று கேள்விகளுக்கமான விடை இங்கே பார்க்கலாம்.

 

1. அந்த காணொளி உண்மையில் ஒரு ஆய்வறிக்கையின் முடிவுகளை ஆதாரமாக வைத்து  உருவாக்கப்பட்டதா?

 

இல்லை. Youtubeல் MicroWorld Discovery எனும் channel. இந்த channel நேயர்களின் விருப்பத்திற்கேற்ப புழுக்களின் மேல் மஞ்சள், வினிகர், உப்பு, அண்ணாச்சிப் பழச்சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு போன்றவற்றை ஊற்றி புழுக்களின் நிலை என்ன என்பதை காணொளியாக வெளியிடும். அவ்வாறு வெளியானதே சமீபத்திய காணொளி. பொழுதுபோக்கிற்காகவும் ஆர்வமிகுதிக்காகவும் வெளியிடப்பட்ட காணொளியை தவிர இது ஆய்வறிக்கையோ மருத்துவ பரிந்துரையோ அல்ல.

 

2. அந்த காணொளியில் உள்ளது போல் தான் ஆய்வுகள் நடத்தப்படுமா?


இல்லை. பொதுவாக ஒரு மூலிகையோ அல்லது ரசாயன கலவையோ அதன் மருத்துவ தன்மையை சோதனை செய்ய பல கண்டிப்பான முறைகள் கையாளப்படவேண்டும். குறிப்பாக

I. ஆய்வில் பயன்படுத்தப்படும் எல்லாப் பொருட்களின் அளவும் (தண்ணீர் உட்பட) துல்லியமாக இருக்க வேண்டும் - சில micromolar அல்லது microliter (1 literல் 10 லட்சத்தில் ஒரு பங்கு) அளவுக்குக்கூட மாற்றம் இருக்கக்கூடாது.  புழுக்களின் மீதோ பாக்டீரியாக்களின் மீதோ உபயோகப்படுத்தப்படும் அந்த குறிப்பிட்ட மூலிகையின் அளவிற்கும் இது பொருந்தும்.

II. அந்த மூலிகை கரைக்கப்படும் திரவம் - அது தண்ணீராகவோ, மெத்தனாலாகவோ, வேறு எந்த கரைப்பானாகவோ (solvent) இருக்கலாம். அது அந்த மூலிகையில் உள்ள பல்வேறு மூலக்கூறு கலவையின் தன்மைக்கேற்றவாறு இருக்க வேண்டும். குறிப்பாக மஞ்சளில் உள்ள curcumin எனும் மருத்துவகுணம் உள்ள வேதிப்பொருள் தண்ணீரில் கரைக்க முடியாது.  curcuminஐ methanolலிலோ olive oil போன்ற எண்ணெயிலோ தான் கரைக்க முடியும்.

III. புழுக்கள், பாக்டீரியாக்கள், செல்களின் மீது பயன்படுத்தும் போது அந்த மூலிகையை அப்படியே (crude) நேரடியாக உபயோகப்படுத்த முடியாது. ஒரு மூலிகையின் மருத்துவத்தன்மை அறிய அந்த மூலிகையை நேரடியாக பயன்படுத்துவதை விட அதன் மூலக்கூறுகளை கண்டறிந்து மருத்துவ குணம் கொண்ட மூலக்கூறை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.. உதாரணமாக மஞ்சளை ஆய்வு செய்யவேண்டுமாயின் மஞ்சளில் உள்ள curcumin எனப்படும் மூலக்கூறை மட்டும் பிரித்தெடுத்து sterilize செய்து பின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

 

ஆனால் இந்த காணொளியில் அப்படி எந்த ஒரு ஆய்வு முறையும் பின்பற்றப்படவில்லை. இந்தக்காணொளியை அடிப்படையாகக்கொண்டு மஞ்சளால் புழுக்கள் இறந்து விட்டன என்று அனுமானிப்பது  மிகப்பெரிய analysis bias. ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம்: ஒரு மனிதன் கிணற்றிற்குள் விழுந்து நீச்சல் தெரியாமல் இறந்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அதனால் தண்ணீர் என்றாலே மனிதஇனத்திற்கு ஆபத்து என்ற முடிவுக்கு வருவோமா? தண்ணீர் பட்டால் அவ்வளவு தான். மனிதன் இறந்து விடுவான் என சொன்னால் எவ்வளவு பிழையோ அது போலத்தான் இந்த காணொளியும்.

 

3. மஞ்சளுக்கு antihelmintic effect (நோய் உண்டாக்கும் புழுக்களை கொல்லும் அல்லது முடக்கும் தன்மை) உள்ளதா?

ஒரு ஆய்வில் (Ref 1) தட்டைப்புழுக்களால் ஏற்படும் நோயான schistosomiasisற்கு மஞ்சள் antihelmintic மருந்தாக உபயோகப்படுமா என பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மஞ்சளை விட தட்டைப்புழுக்களுக்கு வழக்கமாக உபயோப்படுத்தப்படும் praziquantel (PZQ) எனும் மருந்தே பல மடங்கு சக்தி வாய்ந்ததாக முடிவுகள் வந்தது. நோய் தாக்கிய எட்டாவது வாரத்தில் மஞ்சளின் புழுக்களை கொள்ளும் efficiency 39% ஆனால் PZQன் efficiency 90%. இதுவே  பன்னிரெண்டாவது வாரத்தில் மஞ்சளின் efficiency 49% மற்றும் PZQன் efficiency 95%. PZQவுடன் மஞ்சளை சேர்க்கும் பொழுது எட்டாவது வாரத்தில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் பன்னிரெண்டாவது வாரத்தில் 100% புழுக்கள் இறந்துள்ளன (Table). மேலும் புழுக்களின் முட்டைகளுக்கு மஞ்சளால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் PZQ முற்றிலுமாக புழுக்களின் முட்டையையும் அழித்துள்ளது.

 



மேலே உள்ள dataவை பாருங்கள். தட்டைப்புழுக்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாத எலிகளுக்கும் மஞ்சள் சிகிச்சை அளிக்கப்பட்ட எலிகளுக்கும் உள்ள வேறுபாட்டை காட்டிலும் (சிவப்பு சதுரங்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது) சிகிச்சை அளிக்கப்படாத எலிகளுக்கும் PZQ சிகிச்சை அளிக்கப்பட்ட எலிகளுக்கும் தட்டைப்புழுக்களை நீக்குவதில் உள்ள வித்தியாசம் ஒப்பீட்டளவில் மிகப்பெரியது (பச்சை சதுரங்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது)

 

எனவே வெறும் ஆர்வத்திற்காக சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் காணொளிகளை நம்பி ஆராய்ச்சி சான்றுகள்  இல்லாத சிகிச்சை முறைகளை பயன்படுத்தக்கூடாது. மேலும் தமிழ்நாட்டின் அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் antihelmintic மருந்துகள் தரப்படுகின்றன. அவற்றை முறையாகப்பயன்படுத்தி நோய்த்தொற்று அற்ற வாழ்வினை வாழ்வோம்.

 

Reference:

1. https://pubmed.ncbi.nlm.nih.gov/29317884/

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை