100 ரூபாய் மதிப்புள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயத்தின் விலை 10,000 ரூபாயா?
திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் என குறைந்தது 5 லட்சம் பேர் எடுத்துக்கொண்டால் கூட 500 கோடி ரூபாய் திரட்ட முடியுமா? பரவும் வதந்திகள்!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கிண்டியில் கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் உள்ளிட்டவை திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற இவ்விழாவில், நினைவு நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
Attended the commemorative coin release function to mark the birth centenary of legendary leader Kalaignar M Karunanidhi in Chennai today.
— Rajnath Singh (@rajnathsingh) August 18, 2024
Releasing a commemorative coin in Kalaignar’s memory is a tribute to a life dedicated to progress, justice, and the betterment of society.… pic.twitter.com/xpWLXPyW2Y
இந்நிலையில் சமூக ஊடகங்களில் பலரும், “திமுகவில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் ₹100 மதிப்புள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயத்தை ₹10,000 செலுத்தி கட்டாயம் வாங்க வேண்டும் என அறிவாலயம் உத்தரவிட்டுள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை வரை கணக்கிட்டால் குறைந்தது 5 லட்சம் பேர் எடுத்துக்கொண்டால் கூட 5,00,000 × 10,000 = 500,00,00,000. அதாவது கலைஞர் கருணாநிதி நாணயத்தை வைத்து நிர்வாகிகள் மூலம் 500 கோடி ரூபாய் திரட்ட கோபாலபுர திமுக திட்டமிட்டுள்ளது” என்று கூறி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதைக் காணமுடிகிறது.

100 ரூபாய் நாணயத்தின் விலை 10,000 ரூபாயா?
கலைஞர் கருணாநிதி உருவம் பொதித்த 100 ரூபாய் மதிப்புள்ள நாணயத்தை 10,000 ரூபாய் கொடுத்து வாங்குமாறு திமுகவினர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வுசெய்து பார்த்தோம்.
கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா குறித்து பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று ரூ.100 நாணயத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 100 ரூபாய் நாணயம்தான், ஆனால் அதன் மதிப்பு ரூ.10,000. யார் வேண்டுமென்றாலும் 10,000 ரூபாய் கொடுத்து அறிவாலயத்தில் சென்று அதைப் பெற்றுக் கொள்ளலாம். " என்று பேசியுள்ளதைக் காணமுடிந்தது.
மேலும் திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் வரை கணக்கிட்டு குறைந்தது 5 லட்சம் பேர் எடுத்துக்கொண்டால் கூட 5,00,000 × 10,000 = 500,00,00,000. கலைஞர் நாணயத்தை வைத்து நிர்வாகிகள் மூலம் 500 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று கூறியும் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் கலைஞர் கருணாநிதி நாணயங்கள் 200 மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என்பதை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது. 5,00,000 நாணயங்கள் அறிவாலயத்தில் விற்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளும் தவறானவையே.
நினைவு நாணயங்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுவது ஏன்?
பொதுவாக நினைவு நாணயங்கள் முக்கியமான நபர், இடம் அல்லது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை கௌரவிக்கும் அல்லது நினைவுகூறும் வகையில், ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மேலும் இவை வழக்கமான நாணயங்களைப் போல், புழக்கத்தில் அதிக எண்ணிகையில் வெளியிடப்படுவதில்லை.
மேலும் இதுகுறித்து ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் ஆய்வு செய்ததில், ‘Indiagovtmint’ இணையப் பக்கத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட நினைவு நாணயம், ரூ.9,306 க்கு விற்கப்படுவதை அறியமுடிந்தது.

இதே போன்று மோதிலால் நேருவின் 150வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட நினைவு நாணயம், ரூ.10,431 க்கு விற்கப்படுகிறது.

அதிகபட்சமாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவாக வெளியிடப்பட்ட ரூ.5 மற்றும் ரூ.100 மதிப்புள்ள இரண்டு நாணயங்களும் சேர்த்து, தற்போது ரூ.17,014 க்கு விற்கப்படுவதை ஒன்றிய அரசின் இணையதளத்தின் மூலம் அறியமுடிகிறது.

இதன்மூலம் தனித்துவமான வரலாறு கொண்ட நினைவு நாணயங்கள் அதன் பற்றாக்குறையின் காரணமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன என்பதை அறியமுடிகிறது.