YouTurn

புற்றுநோயை கட்டுப்படுத்த இந்தியா மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை

புற்றுநோய்க்கான மருந்து ஆராய்ச்சிகளை மட்டுமே நம்பியிராமல், ஆரம்ப கட்டத்திலே பரிசோதனை மேற்கொள்ளுதல், மக்கள் அணுகக்கூடிய வகையில் மருத்துவ சிகிச்சையை ஏற்படுத்துதல், சிகிச்சைக்கான செலவுகளை குறைத்தல் என ஒருங்கிணைந்த முறையில் புற்றுநோய் பிரச்சினையை அணுக வேண்டும்.

புற்றுநோயை கட்டுப்படுத்த இந்தியா மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை

இந்தியாவில் புற்றுநோய்  ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு 13.9 லட்சமாக இருந்த புற்றுநோய் பாதிப்பு, வரும் 2025ஆம் ஆண்டு 15.7 லட்சமாக உயரும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவில் 9 நபர்களில் ஒருவர் தனது வாழ்நாளில் புற்றுநோயால் பாதிப்படைவதாக கண்டறியப்படுகிறது. இது உலகளவில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு இந்தியா அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் நாடாக இருக்கிறது.

 

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 12 லட்சம் மக்கள் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 9.3 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளது என்று ‘The Lancet Regional Health Southeast Asia journal’ வெளியிடப்பட்ட  ஆய்வு தெரிவித்துள்ளது.

 

குருக்ஷேத்ராவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT), ஜோத்பூர் மற்றும் பதிண்டா ஆகிய நகரங்களில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) ஆகியவை உட்பட சேர்த்து உருவாக்கப்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, ‘ஆசிய கண்டத்தில்  புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அதிக மரணங்கள் ஆகியவற்றில்

சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

 

புகை, மதுப் பழக்கம், காற்று மாசுபாடு காரணமாக சுற்றுப்புறத்தில் இருக்கும் தூசு துகள்கள் (Particulate Matter) ஆகியவை புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கான  காரணமாக சொல்லப்படுகிறது. 50 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப் புற்றுநோய் குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களால் தான் உண்டாகிறது.

 

கர்ப்பப்பை, வாய்,  மார்பகம் ஆகிய வகையைச் சேர்ந்த புற்றுநோய் தான் அதிகமாக ஏற்படக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் புற்றுநோய் எண்ணிக்கையில் மேற்கண்ட வகை புற்றுநோய்கள் தான் மூன்றில் ஒரு பங்காக (⅓) உள்ளது.

 

இருப்பினும், புற்றுநோய் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கக்கூடிய (Vulnerable)  30 வயதுக்கு மேற்பட்டவர்களில் குறைந்த நபர்களே பரிசோதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது.

 

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் 1,50,000 'உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை (HWCs)' புற்றுநோயைக் கண்டறிவதற்கான மையங்களாக மாற்றியிருந்தால் புற்றுநோய் பரிசோதனையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.

 

இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, புற்றுநோய் பரிசோதனை மையங்களை மக்கள் அணுக முடியாத நிலையில் இருக்கும் பிரச்சனையை பெருமளவு குறைத்திருக்க முடியும். ஆனால் நிதி ஆயோக் அறிக்கையின் மூலம், 10 சதவீதத்திற்கும் குறைவான மையங்கள் மட்டுமே புற்றுநோய் போன்ற நோய்களுக்கான முதல் சுற்று பரிசோதனைகளை செய்து முடித்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது.

 

வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டத்தில், புற்றுநோய் 1 அல்லது 2-ஆவது நிலைகளில் (Stages) இருக்கும் போதே கண்டறியப்படுகிறது. ஆனால் ஆசிய கண்டத்திலும் பிற ஏழை நாடுகளிலும் புற்றுநோய் முற்றிப்போன 3 அல்லது 4-ஆவது நிலைகளில் தான் கண்டறியப்படுகிறது.

 

ஆசிய கண்டத்தில் உள்ள குறை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் புற்றுநோய்க்கான மருத்துவ கட்டமைப்பு என்பது பற்றாக்குறையாக உள்ளது அல்லது கட்டுபடியாகாத அளவிற்கு செலவு மிகுந்ததாக உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகள்  தாமதமாக கண்டறியப்படுவதும், அறிகுறிகள் கண்டறியப்பட்ட பின்னர் உயர் சிகிச்சைக்கான சரியான பரிந்துரைகள் இல்லாத சூழலும் நிலவுவது புற்றுநோயால் ஏற்படும் இறப்பு குறைக்க முடியாமல் போவதற்கான காரணங்களாக சொல்லப்படுகிறது.

 

ஒவ்வொரு நாட்டிலும் 2.5 லட்சம் மக்களுக்கு ஒரு கதிரியக்க சிகிச்சை (Radiotherapy) அளிக்கும் இயந்திரம் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO)  பரிந்துரைக்கிறது. ஆனால் இந்தியாவில், 15 லட்சம் மக்களுக்கு ஒரு கதிரியக்க சிகிச்சை அளிக்கும் இயந்திரம் என்ற நிலைதான் உள்ளது. மேலும் கிட்டத்தட்ட 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 95 சதவீத புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நகரத்தில் தான் இருக்கிறது.

 

சராசரியாக புற்றுநோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள ரூபாய். 61,216 செலவாகிறது. இது இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு கட்டுபடியாகாத தொகையாகும். இதனால், புற்றுநோய் சிகிச்சை ஒரு குடும்பத்தை நிதி நெருக்கடியில் தள்ளுவதாக இருக்கிறது.

 

புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்காக அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், பெரும்பாலான நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு கணிசமான நிதிச் சுமை ஏற்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (1/3), தங்களின் ஓராண்டு குடும்பச் செலவில் பாதிக்கும் மேலாக மருத்துவமனைக்கு செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

2014 இல் ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கிராமப்புற மக்களில் 14% மற்றும் நகர்ப்புற மக்களில் 18% மட்டுமே மருத்துவ காப்பீட்டை கொண்டிருந்தனர். அரசாங்கம் மருத்துவ துறைக்கு  போதுமான அளவிற்கு செலவு செய்யாமல் இருப்பது, சுகாதாரப் பாதுகாப்பு ஒதுக்கீடு மற்றும் விரிவான காப்பீடு பற்றாக்குறையாக இருப்பது போன்ற காரணங்களால் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகளை தங்களது சொந்த சேமிப்பில் இருந்து கொடுக்க வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

 

இந்தியாவில், 75 சதவீதத்திற்கும் அதிகமாக புற்றுநோய் சிகிச்சைகள் சொந்த சேமிப்பிலிருந்து தான் மேற்கொள்ளப்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் 'பேரழிவு தரும் மருத்துவ செலவு (Catastrophic health expenditure)' என்று அழைக்கிறார்கள். இந்த 'பேரழிவு தரும் மருத்துவ செலவு' என்பது ஒரு குடும்பத்தின் 'நிதி நிலைத்தன்மையை' குலைத்துப்போடும் அளவிற்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை குறிப்பதாகும். ஒருவரின் வருமானத்தில் பெரும் பங்கு மருத்துவத்திற்காக செலவழிக்கப்படும் போது, உணவு, உடை, வீடு போன்ற அடிப்படை தேவைகளுக்கான செலவுகள் தானாகவே குறைத்துக் கொள்ளப்படுகிறது.

 

மருத்துவ சிகிச்சைக்கான மொத்த செலவில், 40 சதவீதத்திற்கும் அதிகமாக குடும்ப வருமானத்தில் இருந்து கொடுக்கப்படும் நிலையிருந்தால், அதனை 'பேரழிவு தரும் மருத்துவ செலவு (Catastrophic health expenditure)' என்று உலக சுகாதார நிறுவனம் வரையறைக்கிறது.

 

இப்படி புற்றுநோய் நெருக்கடி தீவிரமடைந்து வருவதற்கு சமூகத்தில் ஆழமான வேரூன்றியுள்ள சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், உயர் சிகிச்சைகளை ஏழைகள், கிராமப்புற மக்கள் அணுக முடியாத வகையில் வைத்திருப்பது, மிகக் குறைந்த அளவிலான பரிசோதனை மையங்கள் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது.

 

இதனை சரிசெய்வதற்கான வழியை பரிந்துரைக்கும் வகையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சக ஊழியர்களுடன் இணைந்து புற்றுநோய் நிபுணரான ‘பாவனா சிரோஹி’ The Lancet' இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.

 

அதன்படி, “உலகளவில் புற்றுநோய் பற்றிய தரவுகளை சேகரித்து,  தகவல் தொகுப்பை உருவாக்க முடியும் என்கிறார். சிகிச்சை அளிக்க தேவையான திறன்வாய்ந்த மருத்துவர்கள் (Human Resources), மருத்துவ உள்கட்டமைப்பு வசதி, சுகாதார சேவைகள் போன்ற புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் தொடர்பான தரவுகளின்  சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கான ஒரு விரிவான அமைப்பும் இதில் அடங்கும்" என்கிறார்.

 

இதனைக் கொண்டு ஒரு பிராந்தியத்தில் உள்ளாட்சி மருத்துவ கட்டமைப்புடன் இணைந்து புற்றுநோய் கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட முடியும் என்று பரிந்துரைக்கிறார்.

 

இவற்றில் இருந்து நாம் புரிந்து கொள்வது, “வெறுமனே புற்றுநோயை கண்டறியும் செயல் மட்டுமே புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைத்துவிடாது. புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை அளிக்கும் மருத்துவ கட்டமைப்பு இருப்பதும், அவை மக்கள் அணுகக்கூடிய வகையிலும், செலவு குறைந்ததாகவும் இருக்கவேண்டும்” என்பது தான்.

 

மேலே குறிப்பிட்டது போல, ஆரம்ப சுகாதார நிலையங்களை  பலப்படுத்துவதுதான் ஆரம்ப நிலையிலே புற்றுநோயை கண்டறிவதை சாத்தியப்படுத்தும். இதனை கணக்கில் கொண்டு அரசு மருத்துவத்துறையை பரவலாக்க முதலீடு செய்ய வேண்டும். ஆனால், 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு 1.9℅ மட்டுமே ஒன்றிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

 

எனவே, சரியான நேரத்தில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்வதையும், குறைந்த செலவில் சிகிச்சை கிடைப்பதையும் உறுதி செய்வது, சிகிச்சை செலவுகளை காப்பீடு செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கைகள் வகுப்பது அவசியமாகும்” என்று NIT, AIIMS ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட  சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை