தாவரங்கள் உயிரைக் கொல்லுமா? உண்மையை மிகைப்படுத்தும் கிருஷ் அசோக் !
வேளாண்மைக்கு பழக்கப்படாத தாவரங்கள் (not domesticated for cultivation) விஷத்தன்மை வாய்ந்தது அது உயிரைக் கொல்லும் தன்மையுடையது என்று அர்த்தம் இல்லை.
“நீங்கள் எந்த விலங்கை வேண்டுமானாலும் உண்ண முடியும். ஆனால், 90 சதவீதத்துக்கும் அதிகமான தாவரங்கள் உங்களைக் கொன்றுவிடும்” என்று மசாலா லேப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிஷ் அசோக் என்பவர் பேசியுள்ளார்.
அதுகுறித்து அந்த காணொளியில் அவர் பேசுகையில், “உலகில் 4 லட்சம் தாவரங்கள் உள்ளன. அவை 450 வகைகளான தாவரக் குடும்பங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை உண்ண முடியாது அல்லது அவை விஷத்தன்மை வாய்ந்தது அல்லது இரண்டும் கொண்டதாக இருக்கலாம்” என்று கூறுகிறார்.
இதற்கான ஆதாரத்தை அவர் தெரிவிக்கவில்லை என்றாலும், சில ஸ்க்ரீன்ஷாட்களை வீடியோவில் இணைத்துள்ளார். அதன் அடிப்படையில் நாம் தேடியபோது அமெரிக்க அரசு இணையதளமான ‘National Center for Biotechnology Information’-ல் “A Review of Biologically Active Natural Products from Mediterranean Wild Edible Plants: Benefits in the Treatment of Obesity and Its Related Disorders” என்ற தலைப்பில் உள்ள ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாக கொண்டே அவர் இவ்வாறு பேசியிருப்பதை தெரிந்து கொள்ளமுடிகிறது.
இந்த ஆய்வுக் கட்டுரையில், “உலகில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை தாவர இனங்கள் உள்ளன. அவற்றில் 30,000 தாவரங்கள் உண்ணுவதற்கு உகந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆனாலும், இதில் 7,000 தாவரங்கள் மட்டுமே உணவுக்காக வளர்க்கப்படுகின்றன (cultivated or collected as food). தற்போது, வெறும் 20 தாவர இனங்கள் மட்டுமே உலகின் உணவுத் தேவையில் 90 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஆதாரமாக காட்டிதான் கிரிஷ் அசோக் “90 சதவீதத்துக்கும் அதிகமான தாவரங்கள் உங்களைக் கொன்றுவிடும்” என்று கூறுகிறார்.
ஆனால் கிரிஷ் அசோக் மேற்கோள் காட்டும் இந்த பத்திகள் எதைப் பற்றி பேசும் ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
‘Alimurgic’ தாவரங்கள் பற்றி பேசும் இடத்தில் தான் மேற்கண்ட வாக்கியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘Alimurgic’ தாவரங்கள் என்பது இதுவரை பொதுவாக வேளாண்மை (Cultivation) செய்யப்பட்டு உணவுக்காக சேகரிக்கப்படும் தாவரங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்படும் போது உணவாக பயன்படுத்தப்படும் காட்டுத் தாவரங்களை (Wild plants) குறிக்கும் சொல்லாகும். இங்கே Wild plants என்று சொல்லப்படுவது இன்னும் வேளாண்மைக்கு பழக்கப்படாத (not domesticated for cultivation) தாவரங்களை குறிப்பதாகும்.
உணவுப் பழக்கத்தில் பன்முகப்பட்ட உணவுகளை (Diverse diet) சேர்த்துக் கொள்வதற்காகவும் மருத்துவ நோக்கத்திற்காவும் உண்ணத் தகுந்த காட்டு தாவரங்களை (wild edible plants) எடுத்துக் கொள்ளும் புதிய போக்கு தற்போதைய காலத்தில் அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இவ்வாறு ‘இயற்கையானது’ என்றாலே ‘பாதுகாப்பானது’ என்று அந்தத் தாவரங்களை எளிமைப்படுத்துகிறார்கள். தொழிற்முறை சமையல் கலைஞர்கள் கூட இந்த வழக்கத்தை ஊக்கப்படுத்துகிறார்கள். இத்தகைய தாவரங்களால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் இந்த ஆய்வுக் கட்டுரை எச்சரிக்கை செய்கிறது.
இது தொடர்பாக மேலும் தேடியபோது “Genetics and genomics of crop domestication” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைக் காணமுடிந்தது.
அதில், “சுமார் 4 லட்சம் தாவரங்கள் உள்ளன. இவற்றில் 200-க்கும் குறைவான தாவர இனங்களே உணவு மற்றும் தீவனத்திற்காக வேளாண்மை செய்யப்படும் பயிராக மாற்றப்பட்டுள்ளன. நாம் உண்ணும் 75 சதவீத உணவு வெறும் 12 பயிர் வகைகளிலிருந்து மட்டுமே கிடைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், “மரபியல் பற்றிய புதிய அறிவும், கலப்பினம், மரபணு மாற்றத்துக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களும் அறிமுகமானால் மேலும் பல புதிய தாவர இனங்களைப் பயிராக்க முடியும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மேலும் பல தாவரங்களை உணவுக்காக பயிராக்க முடியும் என்றுதான் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதிலிருந்து, 90 சதவீத தாவரங்கள் உயிரைக் கொல்லும் என்று கிரிஷ் அசோக் குறிப்பிடுவது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவே தெரிகிறது. மேலும் இன்னும் வேளாண்மைக்கு பழக்கப்படாத தாவரங்கள் (not domesticated for cultivation) விஷத்தன்மை வாய்ந்தது அது உயிரைக் கொல்லும் தன்மையுடையது என்று அர்த்தம் இல்லை. அவைற்றையும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உதவுடன் தேவைப்படும் பட்சத்தில் வேளாண்மைக்கு கொண்டுவர முடியும்.
அதேபோல், இயற்கையானது என்றாலே ஆரோக்கியமானது பாதுகாப்பானது என்று அர்த்தமில்லை. எந்தவொரு தாவரத்திலும் பல்வேறு வகையான உயிர்வேதியியல் மூலக்கூறுகள் இருக்கும். அவற்றில் சிலது விஷத்தன்மை (Toxins) வாய்ந்ததாகவும் இருக்கலாம். இதனால் மருத்துவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆர்வலர்கள் அறிவுரை இல்லாமல் வேளாண்மைக்கு பழக்கப்படாத உண்ணத் தக்க தாவரங்களை (wild edible plants) சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.