அமரன் காஷ்மீர் vs ரியல் காஷ்மீர் – காஷ்மீரிகள் AFSPA சட்டத்தை எதிர்ப்பது ஏன்?
AFSPA சட்டம் ஏன் எதிர்க்கப்படுகிறது?
அமரன் திரைப்படம் காஷ்மீர் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் மனைவியின் பார்வையிலிருந்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், காஷ்மீரைச் சேர்ந்த மக்களின் பார்வையிலிருந்தும் மனித உரிமை அமைப்புகளின் பார்வையிலிருந்தும் அணுகவேண்டிய தேவை இருக்கிறது. அப்போதுதான் காஷ்மீரின் உண்மை நிலவரத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.
காஷ்மீரில் மக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான உறவை தீர்மானிப்பதில் AFSPA (ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்) என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த சட்டம்தான் காஷ்மீரில் ஆயுதப் படையினருக்கு உச்சபட்ச அதிகாரத்தினைக் கொடுத்து, காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்துவருகிறது.
இந்த சட்டத்தின்படி, ராணுவத்தினருக்கு காஷ்மீரில் அப்படி என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, முதலில் இந்த சட்டம் எப்படி வந்தது, எதற்காக கொண்டுவரப்பட்டது எனும் வரலாற்றினைப் பார்ப்போம்.
ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய AFSPA
AFSPA எனும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் துவக்கப் புள்ளி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. இந்திய விடுதலைப் போராட்ட காலக்கட்டத்தில் 1942ஆம் ஆண்டு ’வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தீவிரமடைந்தபோது, அந்த போராட்டத்தினை ஒடுக்குவதற்காக, அதில் ஈடுபடும் தலைவர்களை முடக்குவதற்காக ஆங்கிலேய அரசு ஆகஸ்ட் 15, 1942 அன்று ஆயுதப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டம் (Armed Forces (Special Powers) Ordinance) ஒன்றினைக் கொண்டு வந்தது.
இந்த அவசரச் சட்டத்தின் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்தினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, ஆயுதப் படையினர் போராட்டக்காரர்களுக்கு மரணத்தை விளைவிக்கும் அளவிற்குக் கூட தங்களுடைய பலத்தை பயன்படுத்தலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டது. எளிமையான மொழியில் சொல்வதென்றால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும் போராட்டக்காரர்களை கொலை செய்வதற்கான அதிகாரம் நேரடியாக ஆயுதப் படையினரின் கைகளில் இந்த அவசர சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ஆயுதப் படையினரின் அத்துமீறல்களுக்கு அல்லது அவர்களால் ஏற்படுத்தப்படும் மரணத்திற்கு சம்மந்தப்பட்ட வீரர்கள் அல்லது அதிகாரிகள்மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கமுடியாதபடி அவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆயுதப்படையினரின் மீது சட்டவிசாரணை தேவையென்றால், அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் தேவை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆயுதப்படைகளின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட முடியாத ஒன்றாக உருவெடுத்தது.
விடுதலை பெற்ற இந்தியாவில் AFSPA
இந்தியா விடுதலை அடைந்தபோது, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த சட்டங்கள் மறு உருவம் பெற்றன. இந்தியா-பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக பிரிந்தபோது மிகப்பெரிய கலவரங்கள் வெடித்தன. இந்த கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக என்று சொல்லி, ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரத்தினை இந்திய அரசு நான்கு அவசரச் சட்டங்களாகக் கொண்டுவந்தது.
- வங்காளத்தின் குழப்பம் வாய்ந்த பகுதிகளுக்கான (ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரம்) அவசர சட்டம் Bengal Disturbed Areas (Special Powers of Armed Forces) Ordinance.
- அசாமின் குழப்பம் வாய்ந்த பகுதிகளுக்கான ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரம்) அவசர சட்டம் Assam Disturbed Areas (Special Powers of Armed Forces) Ordinance
- கிழக்கு வங்காளத்தின் குழப்பம் வாய்ந்த பகுதிகளுக்கான (ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரம்) அவசர சட்டம் East Bengal Disturbed Area (Special Powers of Armed Forces) Ordinance
- ஒருங்கிணைந்த மாகாணங்களின் குழப்பம் வாய்ந்த பகுதிகளுக்கான (ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரம்) அவசர சட்டம் United Provinces Disturbed Areas (Special Powers of Armed Forces) Ordinance.
அதன்பிறகு அடுத்த ஆண்டான 1948-ல், இந்த நான்கு அவசர சட்டங்களுக்கு பதிலாக AFSPA என்பது ஒரே சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் புதிதாக கொண்டுவரப்பட்ட இந்த சட்டமானது, ஆங்கிலேயர் ஆட்சியில் 1942 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆயுதப்படைகளுக்கான அவசரச் சட்டத்தினை ஒத்தே இருந்தது.
பின்னர் 1957ஆம் ஆண்டு இந்த AFSPA சட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இந்த ரத்து நெடுநாள் நீடிக்கவில்லை. அடுத்த ஆண்டே 1958ல் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் நாகா மக்களின் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக என்று சொல்லி மீண்டும் கொண்டுவரப்பட்டது. அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களைக் குறிவைத்து கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் அது நாடு முழுவதற்கும் எங்கு வேண்டுமானாலும் விரிவுபடுத்தப்படக் கூடிய சட்டமாகவே உருவெடுத்தது.
1958 ஆம் ஆண்டு AFSPA சட்டத்திற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் பல்லாப் பண்ட் இந்த சட்டத்தினைப் பற்றிப் பேசியபோது, ”தவறாக வழிகாட்டப்பட்டு தகாத செயல்களில் ஈடுபடும் நாகாக்களை கட்டுப்படுத்துவதற்கான மிக எளிமையான வழிமுறைதான் இந்த சட்டம்” என்று குறிப்பிட்டார்.
ஆனால் இந்த சட்டம்தான் அன்றிலிருந்து 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றும் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது. அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதற்கு ஆயுதப்படையினருக்கு அங்கீகாரம் அளிக்கும் கொடுங்கோல் சட்டமாக இச்சட்டம் மனித உரிமை செயல்பாட்டாளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா சபையிலிருந்தும் கூட இச்சட்டத்திற்கான எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவிட்டன.
ஒரு ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட சட்டங்களுக்கு இடமே இருக்கமுடியாது என்று ஐ.நா சிறப்பு நிபுணரான கிரிஷ்டோஃப் ஹெய்ன்ஸ் தெரிவித்தார். இந்த சட்டத்தினை எதிர்த்துதான் மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தினார். ஆனாலும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் AFSPA சட்டத்தினை நீக்கமுடியாது என்று ஒன்றிய அரசு பிடிவாதமாக இருந்துவருகிறது.
இப்போது இந்த AFSPA சட்டமானது ஜம்மு & காஷ்மீர் பகுதிகள் முழுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களிலும் அமலில் இருந்து வருகிறது.
AFSPA அளிக்கும் அதிகாரங்கள்
ஆளுநரின் அதிகாரம்

AFSPA சட்டத்தின் பிரிவு 3, மாநிலங்களின் ஆளுநருக்கு ஒரு மாநிலத்தை குழப்பும் நிலவும் பகுதி (Disturbed area) என்று அறிவிக்கும் அதிகாரத்தினை அளிக்கிறது.
- இதன் அடிப்படையில் ஒரு ஆளுநர் ஒரு மாநிலத்தில் குழப்பமான சூழல் நிலவுவதாகவோ அல்லது ஆபத்தான நிலையில் இருப்பதாகவோ கருதினால், அங்கு ஆயுதப் படைகளின் தேவை இருப்பதாக அவர் கருதினால், அந்த மாநிலத்தின் சில பகுதிகளையோ அல்லது மொத்த மாநிலத்தையோ கூட Disturbed Area என்று அறிவிக்க முடியும். இத்தகைய அதிகாரத்தினை மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கு இந்த AFSPA சட்டம் வழங்குகிறது.
- மேலும் இந்த சட்டத்தில் குழப்பமான சூழல் என்பது எப்படிப்பட்ட சூழல் என்றோ, ஆபத்தான சூழல் என்பது எப்படிப்பட்ட சூழல் என்றோ எந்த வரையறையும் தரப்படவில்லை. எனவே குழப்பமானது, ஆபத்தானது என்ற வார்த்தைகள் ஆளுநரின் நேரடி முடிவெடுக்கும் அதிகாரத்தின் கீழ் சென்று விடுகின்றன.
ராணுவத்தினரின் அதிகாரம்
AFSPA சட்டத்தின் பிரிவு 4, ஆயுதப்படைகளுக்கான அதிகாரத்தை வரையறுக்கிறது. இந்த பிரிவின்கீழ் 4 வகையான முக்கிய அதிகாரங்கள் ராணுவத்தினர் மற்றும் ஆயுதப் படையினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
- முதலில் ஆயுதப்படையினருக்கு சுட்டுக்கொலை செய்வதற்கான அதிகாரத்தினை அளிக்கிறது. ஆயுதப்படையின் அதிகாரி பொது ஒழுங்கினைப் பாதுகாப்பதற்காக, துப்பாக்கியைப் பயன்படுத்தி சுடுவது தேவை என்று கருதினால், ஒரு எச்சரிக்கையைக் கொடுத்துவிட்டு சுடலாம் என்று இச்சட்டப்பிரிவு சொல்கிறது. அப்படி சுடுவதன் மூலமாக ஒருவருக்கு மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம் என்பதை இப்பிரிவு அனுமதிக்கிறது. இச்சட்டம் நடைமுறையில் இருக்கும்போது 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடினாலோ அல்லது அவர்கள் ஏதேனும் ஆயுதங்களை வைத்திருந்தாலோ அல்லது ஆயுதங்களாக பயன்படுத்தப்படக் கூடிய பிற பொருட்களை வைத்திருந்தாலோ கூட இப்படிப்பட்ட நடவடிக்கைகளை ஆயுதப்படையின் அதிகாரி மேற்கொள்ளமுடியும் என்று இச்சட்டம் சொல்கிறது. துப்பாக்கியை ஒரு அதிகாரி எப்போது பயன்படுத்தலாம் என்பதை அவரது கருத்திற்கு இச்சட்டம் விட்டுவிடுகிறது. ”If he is of opinion” என்றுதான் இச்சட்டத்தின் பிரிவு துவங்குகிறது. இதன் காரணமாகத்தான் இச்சட்டத்தினைப் பயன்படுத்தி மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இதனை பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் ஆவணங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
- அதேபோல் அவர்களின் opinion அடிப்படையிலேயே கட்டிடங்கள், வீடுகளை அழிக்கும் அதிகாரத்தினை ஆயுதப்படையினருக்கு வழங்குகிறது. ஆயுதப் படையின் அதிகாரி ஒரு இடத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது அங்கு ஆயுதக் குழுக்களுக்கான பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவோ, தலைமறைவாக இருப்பவர்கள் மறைந்திருக்கும் பகுதியாக அப்பகுதி இருப்பதாகவோ கருதினால், அந்த கட்டிடத்தை அழிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- எவர் ஒருவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் அதிகாரமும் ஆயுதப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையிலேயே யாரை வேண்டுமானாலும் கைது செய்யமுடியும். அவர்மீது பலப்பிரயோகத்தையும் பயன்படுத்தமுடியும்.
- சந்தேகத்தின் அடிப்படையிலேயே எங்கு வேண்டுமானாலும், யாருடைய வீடுகள் மற்றும் கடைகள் வணிக இடங்களிலும் கூட ஆயுதப் படையினர் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து, வாரண்ட் இல்லாமலேயே அங்கு Search நடத்த முடியும்.
இப்படி மனிதர்களின் உயிரை எடுப்பதற்கான அதிகாரம், அவர்களின் சொத்துகளை அழிப்பதற்கான அதிகாரம், யாரையும் கைது செய்வதற்கான அதிகாரம், யாருடைய வீட்டிலும் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து தேடுதல் நடத்துவதற்கான அதிகாரம் என இந்த வரம்பு மீறிய 4 அதிகாரங்களை AFSPA சட்டம் ராணுவம் மற்றும் ஆயுதப் படையினருக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாக காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.
ஆயுதப்படையினருக்கு விசாரணைகளில் இருந்து பாதுகாப்பு
AFSPA சட்டத்தின் பிரிவு 6 ஆயுதப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படா வண்ணம் விசாரணைகளில் இருந்து சட்டப் பாதுகாப்பு அளிப்பதாக இருக்கிறது. ஆயுதப் படையினர் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக வழக்கு பதியவோ, விசாரணை நடத்தவோ முடியாது. ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவர்கள் மீது விசாரணை நடத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதற்கான அத்தனை அடிப்படைகளும் சட்டப்பூர்வமாகவே வழங்கப்படுவதுடன், கொலை செய்தால் கூட சம்மந்தப்பட்ட ஆயுதப் படையினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத வண்ணம் பாதுகாப்பதாகவும் இச்சட்டம் அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான AFSPA

ஜம்மு காஷ்மீருக்கான AFSPA சட்டம் 1990ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பொதுவாக AFSPA சட்டத்தில் 7 பிரிவுகள் மொத்தமாக இடம் பெற்றுள்ள நிலையில், காஷ்மீருக்கு கூடுதலாக ஒரு பிரிவு இணைக்கப்பட்டு 8 பிரிவுகள் அச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
காஷ்மீருக்கான AFSPA சட்டத்தில் பிரிவு 5 என்பது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அப்பிரிவு ஆயுதப்படையினர் எந்த இடத்திலும் Search செய்வதற்கு பூட்டு மற்றும் கதவுகளை உடைப்பதற்கான அதிகாரத்தினை அளிக்கிறது. அதன்படி பூட்டிய வீடு மட்டுமல்லாது வீட்டிலுள்ள அலமாரி, பீரோ, பெட்டிகள் உள்ளிட்ட எவற்றை வேண்டுமானாலும் உடைத்துத் திறக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மக்களின் பேரவலம்
1947 காலம்தொட்டே அரசியல் தீர்வுக்கான உரையாடலாக, ஒப்பந்தமாக, பேச்சுவார்த்தையாக இருந்த காஷ்மீர் விவகாரம் 1980 களின் இறுதியில்தான் ஆயுத சிக்கலாக உருவெடுத்தது. எனவே நாம் திரைப்படங்களில் காண்பதைப் போல காஷ்மீர் என்று சொன்னாலே அது எப்போதுமே தீவிரவாதிகளின் பிரச்சினை என்பதல்ல கள நிலவரம். இந்திய விடுதலைக்குப் பிறகு, காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பிருந்தே தங்களது அதிகாரம் குறித்த உரையாடலை இந்திய அரசுடன் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் நடத்தி வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கட்டமாக காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டு வந்திருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ராணுவத் தீர்வின் மூலம் அல்லாது, அரசியல் தீர்வின் மூலமே காஷ்மீர் சிக்கலுக்கு முடிவு காணமுடியும் என்பதே காஷ்மீர் வரலாறு சொல்லும் பாடமாக இருக்கிறது.
1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஆயுதமேந்திய குழுக்களை ஒடுக்குவதற்காக என்று சொல்லி காஷ்மீருக்கான AFSPA சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக Jammu & Kashmir Coalition of Civil Society (JKCCS) என்ற காஷ்மீரில் இயங்கும் சிவில் சொசைட்டி அமைப்புகளின் கூட்டமைப்பு அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் மனித உரிமைகளின் நிலை என்ற தலைப்பில் 1990 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை இந்த அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. காஷ்மீரில் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 70,000 பேருக்கு மேல் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் 8000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், 6000க்கும் மேற்பட்ட அடையாளம் கண்டறியப்படாத மனித புதைக்குழிகள் இருக்கின்றன என்றும் இந்த அமைப்பின் அறிக்கைகள் பல்வேறு ஆவணங்களை சுட்டிக் காட்டுகிறது. மேலும் கணவர்கள் காணாமல் போனதால், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத அரை விதவைகளாய் சுமார் 1500 பெண்கள் காஷ்மீரில் காத்திருப்பதாகவும் இந்த அமைப்பு Half Widow, Half Wife? என்ற அறிக்கையில் தெரிவிக்கிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையிலேயே JKCCS அமைப்பின் அறிக்கைகள்தான் ஆதாரங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பது இந்த அமைப்பு வெளியிடும் அறிக்கைகளின் உண்மைத்தன்மைகள் குறித்து நாம் விளங்கிக் கொள்ள உதவும். அதேசமயம் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கணக்குகளின்படி, 1990 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலக்கட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 47,000 என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும் 2012ஆம் ஆண்டு இந்த அமைப்பு அரசாங்க ஆவணங்களின் அடிப்படையில் காஷ்மீரில் நடைபெற்ற சட்டவிரோத கொலைகளுக்குக் காரணமான 500 பேரின் பட்டியலை வெளியிட்டது. இதில் மிகப் பெரும்பாலானோர் அரசாங்கத்தின் ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள். இந்த 500 பேரில் 235 பேர் ராணுவத்தினர், 123 பேர் பாராமிலிட்டரி படைகளைச் சேர்ந்தவர்கள், 111 பேர் காவல்துறையினர் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக 235 ராணுவத்தினரில் 96 பேர் (அமரன் திரைப்படத்தில் குறிப்பிடப்படும்) ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படுவதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
AFSPA அமல்ப்படுத்தப்பட்ட 1990 ஆம் ஆண்டு காலம் துவங்கி, இந்த அறிக்கை வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டு காலம் வரையிலான 22 ஆண்டுகளில் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் மீதான குற்றங்களை விசாரிக்க ஒப்புதல் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் ஒரே ஒரு விண்ணப்பத்திற்குக் கூட ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஜனவரி 1, 2018 அன்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சகத்தினால் அளிக்கப்பட்ட பதிலும் JKCSS அமைப்பு குறிப்பிடுவதை உறுதிப்படுத்துகிறது. காஷ்மீரிலிருந்து ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கிற்கு ஒப்புதல் கேட்டு இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன, அதில் எத்தனை விண்ணப்பங்களுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது என்ற கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் 50 வழக்குகளை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடுகிறது. அதில் ஒன்றிற்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்பதையும் பாதுகாப்பு அமைச்சகம் அந்த பதிலில் பட்டியலுடன் குறிப்பிட்டிருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை வைத்துப் பார்க்கும்போது, AFSPA என்பது எப்படி காஷ்மீர் மக்களின் பேரவலங்களுக்கு காரணமாய் இருந்து வருகிறது என்பதை அறியமுடியும். இதன் காரணமாகத்தான் உலகம் முழுதும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், செயல்பாட்டாளர்களும் AFSPA எனும் சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். காஷ்மீருக்கு மட்டுமல்ல இந்தியாவின் எந்த பகுதிக்கு இப்படிப்பட்ட சட்டம் பொருத்தமானதல்ல என்பதும், இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்தில் எங்குமே ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட சட்டங்கள் நிலைத்திருக்கக்கூடாது என்பதுமே மனித உரிமை ஆர்வலர்களின் நீண்ட காலக் குரலாக இருந்து வருகிறது.