YouTurn

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் இடஒதுக்கீடு.. கடும் எதிர்ப்புகளுக்கு பின்பும் மசோதா நிறைவேற்றப்பட்டதா?

ஹரியானா அரசும் இதே போன்று செய்ய முயன்றது, ஆனால் இது நியாயமானதல்ல என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் இடஒதுக்கீடு.. கடும் எதிர்ப்புகளுக்கு பின்பும் மசோதா நிறைவேற்றப்பட்டதா?

தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, கர்நாடகா முழுவதும் கர்நாடக ரக்ஷனே வேதிகே (கேஆர்வி) உட்பட பல்வேறு கன்னட அமைப்பினரும் கடந்த 2-ஆம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர.


தனியார் துறையில் சி மற்றும் டி பிரிவினருக்கு 100% இடஒதுக்கீடும், ஏ மற்றும் பி பிரிவினருக்கு 80% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சரோஜினி மகிஷி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கடந்த பல ஆண்டுகளாகவே கன்னட அமைப்பினர் பலரும் இதுபோன்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தவிர 15 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிப்பவர்களுக்கு கன்னடத்தில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கவேண்டும் உட்பட பல கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தனர்.


இந்நிலையில் கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இடஒதுக்கீடு மசோதா குறித்த, முதல்வர் சித்தராமையாவின் அறிவிப்பு தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட அந்த மசோதாவுக்கு ஜூலை 15 அன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. 


கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் 100 சதவீதம் இடஒதுக்கீடா?

தொடக்கத்தில், தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி வேலைகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத வேலை இடஒதுக்கீட்டை முதல்வர் அறிவித்திருந்தார். இருப்பினும், அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்த பிறகு, 100 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த தன்னுடைய எக்ஸ் பதிவை நீக்கிவிட்டார்

இந்நிலையில் மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் தொழில்கள் மற்றும் மாநிலத்தின் பிற அமைப்புகளில் கன்னடர்களுக்கு நிர்வாக பதவிகளில் 50% மற்றும் நிர்வாகமற்ற பதவிகளுக்கு 75% இடஒதுக்கீடு நிர்ணயம் செய்வதற்கான மசோதாவுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கன்னட தேசத்தில் கன்னடர்கள் வேலை பறிக்கப்படுவதைத் தடுத்து, அவர்களின் தாயகத்தில் சுகபோக வாழ்வு வழங்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பம். நாங்கள் கன்னட ஆதரவு அரசு. கன்னடர்களின் நலனில் அக்கறை காட்டுவதே எங்கள் முன்னுரிமை” என்றும் அதில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?

இந்த மசோதாவின்படி, கர்நாடகாவில் பிறந்தவர்கள், கடந்த 15 ஆண்டுகளாக கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும், கன்னட மொழியைப் படிக்கவும் எழுதவும் நன்கு தெரிந்தவர்கள் "உள்ளூர்வாசிகள்" என அழைக்கப்பட்டு தகுதியானர்வர்கள் என வரையறுக்கப்படுவர். இந்த மசோதாவின்கீழ் பயன்பெற விரும்புவோர் கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோடல் ஏஜென்சியால் கன்னட மொழித்திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் தகுதியான அல்லது பொருத்தமான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், அரசாங்கத்துடன் இணைந்து, தகுதி பெறாத மற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் பயிற்சி அளித்திருக்க வேண்டும் என்றும் அந்த மசோதா கூறுகிறது.


நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:


தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த சட்டத்துடன் இணங்குவதுப் பற்றி நோடல் ஏஜென்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சரிபார்ப்பு நோக்கங்களுக்காக முதலாளிகள் அல்லது மேலாளர்களிடமிருந்து ஏதேனும் தகவல் அல்லது ஆவணங்களைக் கோருவதற்கு நோடல் ஏஜென்சிகளுக்கு அதிகாரம் உள்ளது.


சட்டத்துக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, குறைந்தபட்சம் உதவி தொழிலாளர் ஆணையர் தரத்தில் ஒரு அதிகாரியை அரசாங்கம் நியமிக்கலாம். சட்டத்தை மீறும் முதலாளிகள், ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது மேலாளர்கள் மீது ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும்.


அபராதம் விதிக்கப்பட்ட பிறகும் மீறல்கள் தொடர்ந்தால், மீறல் நிறுத்தப்படும் வரை ஒரு நாளைக்கு 100 ரூபாய் வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும். ஆனால் மீறல் தொடரும் வரை ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆனால் மனிப்பால் குளோபல் எஜுகேசன் சர்வீசஸ் சேர்மன் மோகன்தாஸ் பாய், "இது மிகவும் பிற்போக்குத்தனமான, தேவையற்ற, அரசியலமைப்பிற்கு விரோதமான, மசோதா என்று நான் நினைக்கிறேன். சட்டப்பிரிவு 19ன் கீழ் இது பாரபட்சம் காட்டுவதால் இது சட்டவிரோதமானது. ஹரியானா அரசு இதே போன்று செய்ய முயன்றது, ஆனால் அது நியாயமானதல்ல என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 


இரண்டாவதாக, 'உள்ளூர்' என்பதன் வரையறையைப் பாருங்கள். இங்கு பிறந்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருந்து, கன்னடத்தில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர் உள்ளூர்வாசி. பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவற்றுக்கான சான்றுகள் பள்ளி வெளியேறும் சான்றிதழ் மூலம் கிடைக்கும். என்னிடம் அது இல்லாமல் நான் வேலைக்கு விண்ணப்பித்தால்... நான் உள்ளூர் அல்லாதவனாகக் கருதப்படுவேன்" என்றும் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


மசோதா தற்காலிகமாக நிறுத்தம்:

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கே 100% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பிரிவினைவாத மசோதாவுக்கு தொழில்துறையினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த மசோதா குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றொரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 


அதில், “தனியார்த்துறை நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவு மசோதா இன்னும்
தயாரிப்பு நிலையில் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்“ என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 

இதன்மூலம், கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படாது என்பதையும், மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.


ஆதாரங்கள்:

1.  கன்னடர்களுக்கு கட்டாய வேலைக்கான இடஒதுக்கீடு மசோதா - கர்நாடக அரசு ஒப்புதல் | HTT Explainer

2. Karnataka Job Reservation Bill for Kannadigas explained: Who is eligible? How will it affect the companies? 

3. 75% quota in private jobs to residents: SC notice to Centre on Haryana govt's plea challenging HC order


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை