YouTurn

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அதிக கடன் வாங்கப்படுகிறதா?

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அதிக கடன் வாங்கப்படுகிறதா?
மிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக ஆட்சிக்கு வந்த பின் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது முழுமையான பட்ஜெட்.

இதற்கிடையில், "அதிமுக ஆட்சிக்கு வந்து 10 வருட காலத்தில் வாங்கிய கடன் ரூ.3,53,561 கோடி; ஆனால் ஆட்சிக்கு வந்த 2 வருட காலத்தில் திமுக வாங்கி இருக்கும் கடன் ரூ.2,72,000 கோடி; விலைவாசி உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் கொரோனா & GST வரி இழப்பை தாண்டி அதிமுக வாங்கிய கடன் சதவீதம் 21.22 % (GDP அளவில்). ஆனால் இன்று விலைவாசியை உயர்த்தி மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்த பின்பும் திமுக அரசு வாங்கி இருக்கும் கடன் சதவீதம் - 26 % (GDP அளவில்); இந்த சூழலில் முதல்வருக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது?" என அதிமுக மற்றும் பாஜகவினர் தமிழ்நாட்டின் கடன் தொகை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/satyenaiadmk/status/1638764826142060544

Archive link

Twitter link | Archive link

திமுக ஒரு புறம் கடனை கட்டுப்படுத்தி வருகிறோம் என சொல்லி வரும் நிலையில் அதிமுக இப்படி குற்றஞ்சாட்டி வருகிறது . இதை எப்படி புரிந்து கொள்வது ?

தமிழ்நாட்டின் கடன் : 



2011-2021 வரை அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட மொத்த கடன் ரூ.4,05,433 கோடி ஆகும். இதில், தமிழ் நாடு அரசு சார்பாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அளித்த வெள்ளை அறிக்கையில் 2020-21ம் ஆண்டிற்கான கடன் (Fiscal Deficit) ரூ.92,305 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2020-21ம் ஆண்டுக்கான கணக்குகள் முழுமை பெற்ற பிறகு ரூ.87,742 கோடி Fiscal Deficit ஆக திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட பிறகு, 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ரூ.4,05,433 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் ரூ.3,53,561 கோடி தான் கடன் வாங்கப்பட்டதாக தவறாக பரப்புகின்றனர்.

மேலும் படிக்க : பிடிஆர் நிதியமைச்சர் ஆனப் பிறகு தமிழக அரசு ஒரே ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்கியதா ?

தற்போது 2023-24ல் (BE) நிதியாண்டிற்காக ரூ.92,075 கோடி கடன் வாங்க உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதுவே, 2021-22ல் ரூ.73,739 கோடியாகவும்; 2022-23ல் (RE) ரூ.74,525 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கூட்டினால் ரூ.2,40,339 கோடி வருகிறது. ஆனால், இதையும் ரூ.2,72,000 கோடி என்று தவறாக பரப்புகின்றனர்.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிர்ணயிக்கும் கடன் வரம்பு:

ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த கடன் வரம்பை அடிப்படையாகக் கொண்டே, ஒவ்வொரு ஆண்டும் கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் தொகை (receipt and repayment of Borrowings) மதிப்பிடப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலங்கள் தனது மொத்த உற்பத்தியின் அடிப்படையில் (GSDP) எவ்வளவு கடன் வாங்கலாம் என்கிற அளவு நிதி ஆணையம் பரிந்துரையைக்கொண்டு  ஒன்றிய அரசு மற்றும் நிர்ணயம் செய்கிறது.

அதன்படி 2023 ஆம் நிதியாண்டிற்காக நிர்ணயம் செய்யப்பட்ட கடன் வரம்பு GSDPல் 3.0%. மேலும் 0.5% கடன் மாநிலங்களின் மின்சாரத்துறை சீர்திருத்தங்களை செய்தால் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, மாநில உற்பத்தியின் மதிப்பில் 3.5% கடனாக ஒரு ஆண்டில் பெறலாம்.

அதன்படி, ஒன்றிய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கடன் வரம்பிற்கான மொத்த GSDPல் தமிழ்நாட்டிற்கு 2019-20 ஆம் நிதியாண்டில் 3.26 சதவீதமாகவும், 2020-21 ஆம் நிதியாண்டில் 4.61 சதவீதமாகவும், 2021-22 ஆம் நிதியாண்டில் 3.38 சதவீதமாகவும் இருந்தது.



திமுக ஆட்சிக்கு வந்த பின்,  2022-23 ஆம் நிதியாண்டில் கடன் வரம்பிற்கான மொத்த GSDP மதிப்பு 3.0 சதவீதமாகவும் (Revised Estimate); 2023-24 ஆம் நிதியாண்டில் இது 3.25 சதவீதமாகவும் (Budgeted Estimate) குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள 3.5% அளவைக் காட்டிலும்  குறைவு.

மாநிலங்களுக்கான மொத்த நிலுவைக் கடன்கள்:

2021-22ம் ஆண்டு முதல் 2025-2026-ம் நிதி ஆண்டுகளுக்கான 15 வது நிதி ஆணையத்தின் ஆலோசனைப்படி நிர்ணயிக்கப்பட்ட மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலுவைக் கடன்களுக்கான சதவீதம் 29.1% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மாநிலத்தின் மொத்த நிலுவைக்கடன் அதன் மொத்த பொருளாதார உற்பத்தியின் மதிப்பில் இருந்து 29.1% அளவை மீறாமல் இருத்தல் வேண்டும். அதன்படி தமிழ்நாடு அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலுவைக் கடன்களுக்கான சதவீதத்தை பின்வருமாறு மதிப்பீட்டுக் காணலாம்.



இது 2015-16 ஆம் நிதியாண்டில் 17.94 சதவீதமாகவும், 2016-17 ஆம் நிதியாண்டில் 20.83 சதவீதமாகவும் , 2017-18 இல் 21.19 %, 2018-19 இல்  21.21%, 2019-20 இல் 21.51% மற்றும் 2020-21 இல் 24.98 சதவீதமாகவும் இருந்துள்ளது.

2021-22 ஆம் நிதியாண்டில் 26.69 சதவீதமாக இருந்த நிலுவைக் கடன், 2022-23 ஆம் நிதியாண்டில் (RE) 26.29 சதவீதமாக குறைந்து, 2023-24 ஆம் ஆண்டிற்கான (BE) கடன் சதவீதம் மேலும் குறைந்து 25.63 ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் போது கொரோனா காலத்தில் கூட அரசு வாங்கும் கடன் சதவீதம் 21.21 ஆக இருந்ததாகப் அதிமுகவினர் பகிர்ந்த தகவலில் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், அதிமுக ஆட்சியிலேயே நிலுவைக் கடன்களுக்கான சதவீதம் 25-ஐ தொட்டு விட்டது. 

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசின் கடன் தொகை மொத்த மதிப்பீட்டளவில் ஒப்பிடும் போதும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியின் அடிப்படையில் (GSDP) ஒப்பிடும் போது, கடன் வரம்பு விழுக்காடு அடிப்படையில் குறைந்து அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் தான் இருந்து வருகிறது.

ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த கடன் வரம்பான 3.5%-ஐ விட தமிழ்நாட்டின் நடப்பு ஆண்டான 2023-24 ஆம் ஆண்டில் கடன் வரம்பு 3.25% ஆக குறைய உள்ளது. இது அதிமுக ஆட்சியின் போது இருந்த 4.61% விட மிகக் குறைவு.

Links : 

65236936-TNLA-Tamil-Nadu-Budget-2022-2023-English-FINAL-Date-18.03.2022

budget_speech_e_2023_2024

budget_speech_RBE_t_2021_22

budget_speech_t_2022_2023

Tamil 27-50

TNLA_Tamil_Nadu_Budget_2023_2024_Tamil_part_3_Date_20_03_2023

TNLA-Tamil Nadu Budget 2023-2024 Tamil part-1-Date-20.03.2023
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை