யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் இடையே ‘ஸுஹ்ர் தொழுகையில்’ ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ.
பரவிய செய்தி
பங்களாதேஷில் இந்துக்களை சிறை பிடித்து அடித்து உதைத்து அவர்களை பொது வெளியில் அமர வைத்து இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வைக்கும் காட்சி @youturn_in @Tamila2020

விரிவான விளக்கம்
’சுற்றி நிறைய இளைஞர்கள் நின்றுகொண்டு இருக்க பொதுவெளியில் இளைஞர்கள் வரிசையாக முட்டிபோட்டு அமர்ந்து தொழுகை செய்யும்’ வீடியோவை பதிவிட்டு, ‘பங்களாதேஷில் இந்துக்களை பொதுவெளியில் அடித்து கட்டாயமாக இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்ள வைக்கிறார்கள்’ என்ற கருத்தின் அடிப்படையில் ’எக்ஸ்’ தளத்தில் பாஜகவினர் பரப்புகின்றனர்.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், இந்த வீடியோவை யூட்யூப் தளத்தில் காணமுடிந்தது. 2024 ஜீலை 17 அன்று பதிவேற்றப்பட்டிருந்த இந்த வீடியோவின் காட்சியில், ஒரு செய்திச் சேனலின் logo-வைக் காண்கிறோம்.

இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில், இது ‘SOMOY TV’யின் logo என்பதை அறிகிறோம். இந்த சேனனிலின் யூட்யூப் பக்கமான ‘SOMOY TV Bulletin’ல் இந்த வீடியோ 2024 ஜீலை 16 அன்று “பசுந்தராவில் போராட்டம் நடத்திய மாணவர்களின் ஸுஹ்ர் பிரார்த்தனை” என்ற பங்களா மொழித் தலைப்பில் பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம்.

இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு, ‘Zohar prayer of protesting students’ என்ற keywords மூலம் தேடியதில், ‘Dhaka Press’ என்ற இணையப் பத்திரிகையில், 2024 ஜீலை 16 அன்று வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ’மாணவர் சமூகத்தின் மீதான சத்ரா லீக்கின் தாக்குதல்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வைக் கோரி’ தலைநகர் டாக்காவில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தின் இடையில் மாணவர்கள் ‘ஸுஹ்ர் தொழுகையில்’ ஈடுபட்டனர். இந்த ஸுஹ்ர் தொழுகை என்பது இஸ்லாமியர்கள் அன்றாடம் கடைபிடிக்கும் ஐந்து தினசரித் தொழுகைகளில் கட்டாயத் தொழுகையாகும். இது மதியம் 12 மணியையொட்டி செய்யப்படும் தொழுகையாகும்.
இதிலிருந்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தின் இடையே தொழுகையில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ என்பது உறுதியாகிறது.
இந்த வீடியோவை ’வங்கதேசத்தில் இந்துகளை அடித்துத் துன்புறுத்தி இஸ்லாமை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவதாக’ தவறான தகவலுடன் பரப்புகின்றனர்.
முடிவு:
இது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் இடையே ‘ஸுஹ்ர் தொழுகையில்’ ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ. இதனை, ‘வங்கதேசத்தில் இந்துகள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி துன்புறுத்தப்படுவதாக’ தவறான தகவலின் அடிப்படையில் மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் பாஜகவினர் பரப்புகின்றனர்.