யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துக்களுக்கு எதிராக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே இஸ்லாமியர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.
பரவிய செய்தி
அமெரிக்க முஸ்லிம்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். காய்கறிகளின் விலை உயர்ந்ததால் அல்ல. அவர்கள் இந்து கடைகளில் இருந்து முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று ரோடு ரோடாக பிரச்சாரம் செய்கின்றனர். வியாபார லாபத்தில் குஜராத்தி ஹிந்துக்கள் இந்திய இந்துக்களுக்கு உதவ அனுப்புகின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்துக்களுடன் வியாபாரம் செய்ய வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேலைநிறுத்தம் செய்கிறார்கள்..!!!

விரிவான விளக்கம்
அமெரிக்காவில் உள்ள இந்துக் கடைகளில் முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று கூறி, அங்குள்ள முஸ்லிம்கள் வேலைநிறுத்தம் செய்து, சாலைகளில் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் வெளிநாட்டு சாலையில் “Stop Hindutva USA“ என்று எழுதப்பட்ட வாசகத்துடன் இஸ்லாமியர்கள் சிலர் பிரச்சாரம் செய்வதைத் தெளிவாகக் காண முடிகிறது.
*அமெரிக்க முஸ்லிம்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள் காய்கறிகளின் விலை உயர்ந்ததால் அல்ல இந்து கடைகளில் முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது எனரோடுரோடாக பிரச்சாரம் செய்கின்றனர்.வியாபார லாபத்தில் குஜராத்தி ஹிந்துக்கள் இந்திய இந்துக்களுக்கு உதவ அனுப்புகின்றனர்.தவிர்க்கப்பட வேண்டும் என pic.twitter.com/LO2dufcRyi
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2022-ல் இருந்தே சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
மேலும் “Muslim Mirror” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள அதேக் காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த 2022ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) உறுப்பினர்கள் நபிகள் நாயகம் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதை எதிர்த்து அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே முஸ்லிம் குழுக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். இந்தப் போராட்டத்தில் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமான முஸ்லிம் அல்லாதவர்களும் கலந்து கொண்டனர். இந்தியாவில் முஸ்லிம் சமூகம் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதற்கு அவர்கள் தங்கள் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பரவி வரும் வீடியோவில் “Stop Hindutva USA“ என்று எழுதப்பட்ட பதாகை வைத்திருக்கும் அதே நபர், “Muslim Mirror” வெளியிட்டுள்ள செய்தியிலும் காணப்படுவதைத் தெளிவாகக் காண முடிகிறது.

இதே போன்று, “Maktoobmedia” ஊடகப் பக்கத்திலும் நபிகள் நாயகம் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதை எதிர்த்து அமெரிக்காவின் சிகாகோவில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியுள்ளது குறித்து கடந்த 2022-ல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துக்களுக்கு எதிராக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே இஸ்லாமியர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பதை அறிய முடிகிறது. இதை "படேல் பிரதர்ஸ்" கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என்று ஒருவர் பேசுவது போன்று உள்ள மற்றொரு வீடியோவுடன் சேர்த்து தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், அமெரிக்காவில் உள்ள இந்துக் கடைகளில் முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று கூறி, அங்குள்ள முஸ்லிம்கள் வேலைநிறுத்தம் செய்வதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.