யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோக்கள் வெவ்வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை.
பரவிய செய்தி
Claim 1: ஸ்டாலினின் திமுக ஆட்சியில் மெரினா கடற்கரை சாலையில் தண்ணீர் தேங்கியது இதுவே முதல் முறை அந்த தேங்கிய தண்ணீரில் மின்சார உயிர் பற்றி எரியும் அரிய காட்சியும் திராவிட மாடல் ஆட்சியிலே கிடைக்கப்பட்டுள்ளது நீங்கள் கேட்ட வெள்ளை அறிக்கை இதோ! #ADMK_SLM

X Link 1
Claim 2: முப்பது கோடிக்கு பங்களா முப்பது லட்சத்துக்கு கார் இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போட்டால்

Claim 3: எந்த இடம்னு தெரியல.. சுனாமியை நினைவுபடுத்திய இன்றைய வெள்ளம்

Claim 4: மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்! சென்னையில் மழை பெய்த சுவடே இல்லை

விரிவான விளக்கம்
வங்காள விரிகுடாவில் உருவான ஃபெங்கல் புயல் கடந்த நவம்பர் 30 அன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரியிலும் வட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சென்னையில் விமான சேவைகளும் EMU இரயில் சேவைகளும் கூட பாதிப்படைந்தது.
இந்நிலையில், வெள்ளம் பற்றிய பல்வேறு வகையான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.
உண்மை என்ன:
பரப்பப்பட்ட செய்திகள் ஒவ்வொன்றின் உண்மைத்தன்மையையும் சோதித்து பார்த்தோம்.
- மெரினா கடற்கரை சாலையில் தேங்கிய தண்ணீரில் மின்சாரக் கம்பியின் காரணமாக தீப்பிடித்ததாக தகவல் பரப்பப்படுகிறது.
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘A Family’ என்ற வியட்நாம் செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியை காணமுடிந்தது. அதன்படி, வியட்நாம் நாட்டில் உள்ள ’கான் தோ (Can Tho)’ என்ற நகரத்தில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. உயர் மின்னழுத்த கம்பி அறுந்து சாலையில் தேங்கியிருந்த வெள்ள நீரில் விழுந்ததால் தீப்பொறிகள் ஏற்பட்டதை தான் அந்த வீடியோவில் நாம் பார்க்கிறோம்.

மேலும், இந்த செய்தி ‘News J’ வெளியிட்டதாகவும் பரப்பப்படுகிறது. ஆனால், ‘News J’ அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இந்த செய்தி காணப்படவில்லை.
இதிலிருந்து இந்த வீடியோ வியட்நாமின் ’கான் தோ (Can Tho)’ என்ற நகரத்தில் எடுக்கப்பட்டது என்பதும், சென்னை மெரினா கடற்கரை சாலையில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும் உறுதியாகிறது.
- சென்னையில் செல்வந்தர்கள் வாழும் பங்களாக்களில் கூட வெள்ள நீர் புகுந்துள்ளது என்று பரப்பப்படும் வீடியோ.
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், செப்டம்பர் 08, 2022 அன்று ‘Money Control’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பெங்களூரு நகரத்தில் கோடீஸ்வரர்கள் பலர் வசிக்கும் எப்சிலான் (Epsilon) என்ற குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. அந்த செய்தியில் Harsh Goenka என்ற தொழிலதிபர் ‘எக்ஸ்’ தளத்தில் அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் பரப்பப்படும் வீடியோவும் அப்படியே ஒத்துப்போகிறது.

சென்னையில் உள்ள செல்வந்தர்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ள புகுந்ததாக பரப்பப்படும் வீடியோ, உண்மையில் செப்டம்பர் 2022ல் பெங்களூரில் எடுக்கப்பட்டது என்பது தெளிவு.
- சென்னையில் சுனாமியை நினைவுபடுத்தக்கூடிய அளவு வெள்ளம் என பரப்பப்படும் செய்தி.
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Steve Calabrese’ என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதப்பட்டுள்ள ‘Description’ படி, ’அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ’ஃபோர்ட் மியர்ஸ் கடற்கரையில் (Fort Myers Beach)’ Milton என்ற சூறாவளியால் வெள்ளம் ஏற்பட்டதாக’ தெரிய வருகிறது. இது 2024 அக்டோபர் மாதம் பதிவிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, இந்த வீடியோவில் நாம் பார்ப்பது ஃபோர்ட் மியர்ஸ் கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளைத்தை தான் என்பது உறுதியாகிறது.
- மெரினா கடற்கரை சாலையில் வெள்ளம் ஏற்பட்டதாக பரப்பப்படும் வீடியோ.
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘MSN வலைதளத்தில்’ இந்த வீடியோவைக் காண முடிந்தது. அதன்படி, சவூதி அரேபியாவின் ’ஜெத்தா (Jeddah)’ என்னுமிடத்தில் கடந்த செப்டம்பர் 03, 2024 அன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது.

இதிலிருந்து, இந்த வீடியோ ஃபெங்கல் புயலின் போது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதல்ல என்பது தெளிவாகிறது.
மேற்கூறிய விளக்கங்களில் இருந்து, வெவ்வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட வீடியோகளை பதிவிட்டு, ஃபெங்கல் புயலின் போது பெய்த மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் என்ற தவறான தகவலை பரப்புகின்றனர் என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
இந்த வீடியோக்கள் ஃபெங்கல் புயலின் போது சென்னையில் எடுக்கப்பட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அவை வெவ்வேறு இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட வீடியோகளாகும்.