யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆலமரத்தில் சடங்குகள் செய்து சிலர் வழிபட்டதால், இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி உள்ளூர் இமாம்கள் இந்த மரத்தை அறுத்துள்ளனர்.
பரவிய செய்தி
பங்களாதேஷ் மதரிபுரில் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் மரத்தை இந்துக்கள் வழிபடுவதாகக் கூறி மரத்தை அறுக்கும் முக்கா பயலுக
விரிவான விளக்கம்
இஸ்லாமிய அடையாளத்துடன் இருக்கும் நபர்கள் சிலர் ஆலமரம் ஒன்றை அறுக்கும் வீடியோவை பதிவிட்டு, இந்த சம்பவம் பங்களாதேஷ் நாட்டில் உள்ள மதரிபூரில் நடந்ததாகவும், இந்துக்கள் இந்த மரத்தை வழிபடுவதாகக் கூறி 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்த மரத்தை இஸ்லாமியர்கள் அறுத்ததாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
பங்களாதேஷ் மதரிபுரில் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் மரத்தை இந்துக்கள் வழிபடுவதாகக் கூறி மரத்தை அறுக்கும் முக்கா பயலுக pic.twitter.com/dlozRXNVRI
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe- களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Dhaka Tribune’ என்ற செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
வங்கதேசத்தில் மாதரிப்பூர் என்னும் பகுதியில் உள்ள 200 ஆண்டு பழைமையான ஆலமரம் இருந்திருக்கிறது. அதற்கு 'தெய்விக சக்தி' இருப்பதாக கூறி சிலர் மெழுகுவர்த்தி ஏற்றி சடங்குகள் செய்து வழிபாடு செய்திருக்கிறார்கள். இவ்வாறு சடங்கு செய்து வழிபாடு செய்வது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி உள்ளூர் இமாம்கள் எதிர்த்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக இந்த மரத்தை இஸ்லாமிய மத ஆர்வலர்களும் உள்ளூர் இமாம்களும் சேர்ந்து அறுத்துள்ளார்கள் என்று செய்தியின் மூலம் தெரிய வருகிறது.
மேலும், ‘The Business Standard’ செய்தித்தளத்திலும் இதே செய்தி வெளியாகியுள்ளது. அதிலும், இந்துக்கள் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக எந்த தகவலும் இல்லை.
முடிவு:
ஆலமரத்தில் வழிபாடு செய்வது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி உள்ளூர் இமாம்கள் இந்த மரத்தை அறுத்துள்ளார்கள். இதனை திரித்து இந்துகள் வழிபட்டதால் மரம் அறுக்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.