யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
16ம் தேதி காலை பாலிமர் வெளியிட்ட செய்தியில் (வீடியோ) 17ம் தேதி என எடிட் செய்து தவறான தகவலைப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
வேளச்சேரி மேம்பாலம், கழுகு பார்வை. 17.10.2024 காலை எடுத்த வீடியோ. மழை நின்றது பயம் நிற்கவில்லை.

விரிவான விளக்கம்
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை குறித்து முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மேம்பாலங்களின் மீது வாகனங்களை நிறுத்தினர். இப்படி நிறுத்தப்பட்டதில் ஊடகங்களால் அதிகம் காட்சிப்படுத்தப்பட்டது வேளச்சேரி மேம்பாலம் தான்.
அக்டோபர் 17ம் தேதி வரை மழை பெய்யுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16ம் தேதியே படிப்படியாக மழை குறைந்து நின்றுவிட்டது. மழை நின்ற பிறகும் மக்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எடுக்கவில்லை என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் ’Polimer news’ என்ற லோகோ இருப்பதைக் காண முடிகிறது. மேலும் அந்த வீடியோவில் இடது பக்கம் ‘17.10.2024 காலை எடுத்த வீடியோ. மழை நின்றது பயம் நிற்கவில்லை’ என்றுள்ளது. அது தனியாக எடிட் செய்யப்பட்டதுபோல் இருப்பதால் இந்த வீடியோ குறித்து பாலிமரின் சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம்.
இந்த வீடியோவை பாலிமர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 16ம் தேதி பதிவிட்டுள்ளனர். பரவக் கூடிய வீடியோவில் இருப்பது போன்று ‘17.10.2024 காலை எடுத்த வீடியோ’ என எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், மழை நின்ற நிலையில் வேளச்சேரி மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்வதாக பாலிமர் யூடியூப் பக்கத்தில் 16ம் தேதி மதியம் 3.25-க்கு செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல் 17ம் தேதி காலை 8.35-க்கு சன் நியூஸ் வெளியிட்ட செய்தியிலும் உரிமையாளர்கள் வாகனங்களைக் கொண்டு செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.

மழையின் அளவு குறைய தொடங்கிய 16ம் தேதி முதலே மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது..
ஆனால், 16ம் தேதி காலை பாலிமர் வெளியிட்ட செய்தியில் (வீடியோ) 17ம் தேதி என எடிட் செய்து தவறான தகவலைப் பரப்புகின்றனர்.
முடிவு:
மழை நின்ற பிறகும் வேளச்சேரி மேம்பாலம் மீது நிறுத்தப்பட்ட வாகனங்கள் எடுக்கப்படவில்லை என 17ம் தேதி பாலிமரில் செய்தி வெளியாகி இருப்பதாகப் பரவும் வீதியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோவை பாலிமர் 16ம் தேதி வெளியிட்டுள்ளது. 16ம் தேதி மாலை மற்றும் 17ம் தேதி காலை அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் எடுக்கப்பட்டுள்ளது.