யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்றிணைத்து, பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
(சஇறைவன்) இயற்கை அதன் சக்தியில் ஈடு இணையற்றது. மனிதன் எவ்வளவு அறிவைப் பெற்றிருந்தாலும், எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும் இயற்கையின் ஒரு சிறிய தளம்பலுக்கு முன்னால் அவன் இன்னும் உதவியற்றவனாகவே இருக்கிறான். ஒரு புயலின் ஒரு பார்வை, ஒரு பூகம்பத்தின் ஒரு அதிர்வு, ஒரு சில மழைத்துளிகள் அல்லது சூரிய ஒளியின் ஒரு கதிர் மனிதனின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.

விரிவான விளக்கம்
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பெரும் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் மழை வெள்ளம் குடியிருப்புகள் பகுதிகளில் சூழ்வது போன்ற பல்வேறு வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள முதல் காட்சியை கூகுள் ரிவர்ஸ் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது IBC Tamil Media ஊடகத்தில் பரவி வரும் வீடியோவுடன் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ரஷ்யாவின் டைர்னியாஸ் பகுதியில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பரவி வரும் வீடியோவில் இடம்பெற்ற இரண்டாவது பகுதி குறித்து தேடி பார்த்தோம். Newyork Post ஊடகத்தில் ”Frightening moment Argentina town’s only bridge is destroyed by mud wave captured on video” என்ற தலைப்பில் டிசம்பர் 26, 2023 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் அர்ஜென்டினாவின் ரின்கான் கிராமத்திற்குச் செல்லும் ஒரே பாலம் வெள்ளப்பெருக்கின் போது அடித்துச் செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதில் பதிவான அடுத்த வீடியோவை தேடிய போது, அமெரிக்காவை சேர்ந்த The Sun என்ற ஊடகத்தில், ஜூலை 3, 2021 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஜப்பான் நாட்டில் உள்ள அட்டாமி என்ற நகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இதனால் அங்கிருந்த குடியிருப்புகள் அனைத்தும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே போல் அடுத்து வீடியோ குறித்து கூகுள் லென்ஸ் மூலம் தேடினோம். அமெரிக்காவை சேர்ந்த CBS News என்ற ஊடகப்பக்கத்தில், நார்வேயில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் மொபைல் வீடு அடித்துச் செல்லப்பட்டு, பாலத்தில் மோதியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதே போல் பரவி வரும் வீடியோவில் லாரி மற்றும் கார் வெள்ளத்தில் மாட்டியிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து தேடிய போது, World Climate News என்ற எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது. அதில் அமெரிக்காவின் டென்னசி நகரில் உள்ள சட்டனூகா பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்றிணைத்து, பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.