யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மன்மோகன் மிஸ்ரா என்ற அந்நபர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிடையாது. மேலும் தமிழ்நாடு காவல் துறையின் ஒத்துழைப்புடன் தான் அந்நபர் கைது செய்யப்பட்டு உ.பி. அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பரவிய செய்தி
பிரதமர் மோடி குறித்து அவதூறு சென்னை நபரைத் தட்டி தூக்கிய உத்தரபிரதேச போலீசார்! பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய நபரை, சென்னையில் வீடு புகுந்து உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்தனர்.

விரிவான விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் குறித்து சென்னையைச் சேர்ந்தவர் அவதூறாகப் பேசி வீடியோ பதிவிட்டதாகவும் அவரை உத்தரப்பிரதேச காவல் துறை சென்னைக்கு வந்து வீடு புகுந்து கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் ஒரு நியூஸ் கார்டு பரப்பப்படுகிறது.
— 🌷🌷🌷சித்ரா(Renu)🌷🌷🌷 (@Revathi67907391) December 13, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய நியூஸ் கார்டில் ‘ஒரே தேசம்’ என்கிற லோகோ இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே அதிலுள்ள வார்த்தைகளைக் கொண்டு தேடியதில், இது 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான செய்தி என்பதை அறிய முடிந்தது.

சென்னையில் வசித்து வந்த மன்மோகன் மிஸ்ரா என்பவர் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் குறித்து இந்தியில் அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் கொட்வாளி காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து அவரை கைது செய்ய உத்தரப்பிரதேச காவல்துறை சென்னை வந்தனர். அப்படி வரும் போது அப்போதைய தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்து அனுமதியும் உதவியும் கோரியதுடன், கைது செய்யப்பட்ட மன்மோகன் மிஸ்ரா மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகே உத்தரப்பிரதேசம் அழைத்துச் சென்றுள்ளனர். இக்கைது பற்றி 2021, ஆகஸ்ட் மாதமே ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இவற்றிலிருந்து பரவக் கூடிய இச்சம்பவம் தற்போது நடந்ததில்லை என்பதும், தமிழ்நாட்டுக் காவல் துறையின் ஒத்துழைப்போடுதான் கைது சம்பவம் நடந்துள்ளது என்பதும் தெளிவாகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர் சென்னையில் வசித்து மட்டுமே வந்துள்ளார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் அல்ல.
முடிவு:
மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாகப் பேசியவரை உத்தரப்பிரதேச காவல் துறை சென்னையில் கைது செய்த சம்பவம் 2021ம் ஆண்டு நிகழ்ந்தது. மன்மோகன் மிஸ்ரா என்ற அவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிடையாது. மேலும் தமிழ்நாடு காவல் துறையின் ஒத்துழைப்புடன் தான் அந்நபர் கைது செய்யப்பட்டு உ.பி. அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.