யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது சாரணர், சாரணியர் வைர விழா நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசியக் கொடிக்கு மூன்று விரலில் சல்யூட் செய்ததாகப் புகைப்படம் ஒன்று பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்துப் பரவும் படம் எங்கு எந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்பது பற்றி தேடினோம். உதயநிதி ஸ்டாலின் மூன்று விரல் சல்யூட் அடிக்கும் புகைப்படத்துடன் தினகரனில் கடந்த 28ம் தேதி செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளவாய்ப்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். பிப்ரவரி 3ம் தேதி வரை 7 நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சாரணர் இயக்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தான் உதயநிதி மூன்று விரல் சல்யூட் செய்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு இந்து தமிழ் திசை ஊடக இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் அன்பில் மகேஷ் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மூன்று விரல் சல்யூட் செய்வதை அப்புகைப்படங்களில் காணலாம். ‘திமுக’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்நிகழ்ச்சி வீடியோவிலும் இக்காட்சிகளைக் காண முடிகிறது.
சாரண, சாரணியர் சல்யூட் எப்படி இருக்க வேண்டுமென ’BSG India’ தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படிதான் உதயநிதி சல்யூட் செய்துள்ளார். இவற்றிலிருந்து உதயநிதி ஸ்டாலின் தேசியக் கொடிக்கு சல்யூட் செய்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.

தேசியக் கொடி குறித்துப் பரப்பப்பட்ட பொய் செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்ன் தளத்தில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேசியக் கொடி அவமரியாதை செய்யப்பட்டதாகப் பரவும் பொய்!
மேலும் படிக்க: தேசிய கீதம் பாடுவது பற்றிய ரங்கராஜ் பாண்டேவின் கற்பிதங்கள்!
முடிவு:
தேசியக் கொடிக்கு மூன்று விரலில் உதயநிதி ஸ்டாலின் சல்யூட் செய்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் தவறானது. அது சாரண, சாரணியர் நிகழ்ச்சியில் செய்யப்பட்ட சல்யூட்.
