யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் இருவேறு பெண்கள் ஆவர்.
பரவிய செய்தி
இரு வேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணுக்கு மாறி மாறி உதவி வழங்குவதின் மர்மம் என்ன? அந்த பெண் புஷி ஆனந்த் அவர்களின் உறவினராக இருக்குமோ ??

விரிவான விளக்கம்
ஃபெங்கல் புயலால் பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், சென்னையின் டி.பி. சத்திரம், அமைஞ்சகரை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இந்தச் செயல் விமர்சனத்திற்கு உள்ளானது. 'விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகளை வழங்கியிருந்தால் இன்னும் மனிதாபிமானமாக இருந்திருக்கும்' என்று கூறி விமர்சித்தனர். இந்நிலையில், இருவேறு சந்தர்ப்பங்களில் ஒரே பெண்ணிற்கு விஜய் நிவாரண உதவி வழங்குவதாக தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் இரண்டு புகைப்படங்களில் முதல் படத்தின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ‘News Tamil’ சேனலின் யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது.
மேலும் இது குறித்து தேடியதில், ‘News 9’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியை காண முடிகிறது. அதன்படி, 2023 டிசம்பர் 30 அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு விஜய் நிவாரண உதவிகள் வழங்கினார் என்று தெரிகிறது.
பரப்பப்படும் மற்றொரு புகைப்படத்தின் keyframe- களைக் கொண்டு தேடுகையில், 2024 டிசம்பர் 3 அன்று 'புதிய தலைமுறை' செய்தித் தொலைக்காட்சியின் யூட்யூப் தளம் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள வீடியோவில் 'தவேக தலைவர் விஜய் மக்களுக்கு உதவிகள் வழங்கும்' காட்சியை காண முடிகிறது.
மேலும் இது குறித்து தேடிய போது, News9 Live செய்தித்தளம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மேற்கண்ட வீடியோவில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை காண்கிறோம். இந்த செய்தி, சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தவெக தலைவர் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிவாரண உதவிகள் வழங்கியதாக குறிப்பிடுகிறது.
இதிலிருந்து முதல் புகைப்படத்தில் இருக்கும் பெண் 2023 டிசம்பர் 30 அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் நிவாரணம் வாங்கிய பெண் என்பதும், இரண்டாவது புகைப்படத்தில் இருக்கும் பெண் 2024 டிசம்பர் 3 அன்று பனையூரில் தவெக கட்சி அலுவலகத்தில் நிவாரணம் பெற்றுக்கொண்டவர் என்பதும் தெளிவாகிறது.
இந்த இரண்டு புகைப்படங்களில் உள்ள பெண்களையும் ஆய்வு செய்து பார்த்ததில் இருவரும் வேறு வேறு நபர்கள் என்பதும் தெளிவாகிறது.

மேற்கூறிய விவரங்களில் இருந்து, இரண்டு புகைப்படங்களில் நிவாரணம் வாங்குவது இருவேறு பெண்கள் என்பது தெளிவாகிறது. ஒருவர் 2023ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது நிவாரணம் வாங்கியவர். மற்றொருவர் தற்போது ஃபெங்கல் புயலால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது நிவாரணம் வாங்குபவர்.
முடிவு:
இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் இருவேறு பெண்கள் ஆவர். இந்த புகைப்படங்களைக் கொண்டு ஒரே பெண் இருவேறு நிகழ்ச்சிகளில் நிவாரணம் பெறுகிறார் என்று தவறாக பரப்பப்படுகிறது.