யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காவல்துறை ரோந்துப் பணிக்காக டிரோன்களை பயன்படுத்துவதும், பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் கண்காணிப்பு பயன்படுத்தப்படுவதும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.
பரவிய செய்தி
இந்தியாவில் முதன்முதலாக பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் மூலம் ரோந்து செய்யும் முறை தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


விரிவான விளக்கம்
ஜூன் 9ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்து நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட ‘சிங்க பெண்’ சிறப்பு படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அந்நிகழ்வில் பேசிய முதல்வர் விஜய், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக இந்தியாவிலே முதன்முதலாக டிரோன் மூலம் ரோந்து செய்யும் முறை தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் அறிமுகப்படும்’ என்று அறிவித்தார். இதனை தவெக ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

🚨First time in India, drone patrol will be introduced for women’s safety in Tamilnadu👏🏻👏🏻 pic.twitter.com/me6oVfgmO5
உண்மை என்ன?
காவல்துறையில் டிரோன் மூலம் கண்காணிப்பு (ரோந்து) செய்வது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம்.

‘The Indian Express’ செய்தித்தளத்தில் 2023 ஜூன் மாதம் வெளியான செய்தி ஒன்றில், ‘இந்தியாவிலே முதன்முறையாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘டிரோன் காவல் படை (Drone Police Unit)’ அமைக்கப்பட்டுள்ளதாக' குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகரத்தை பருந்துப் பார்வையில் கண்காணிக்க போலீஸாருக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் 2026 ஏப்ரல் மாதம் ‘The Hindu' செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, ‘தெற்கு இரயில்வே ஹைதராபாத் மண்டலத்தின் கீழ் இயங்கும் இரயில்வே பாதுகாப்பு படை (RPF), ‘Pink Patrol’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஹைதராபாத் நகரத்தில் இயங்கும் புறநகர் இரயில்களில் கண்காணிப்பு பணிக்காக டிரோன் பயன்படுத்தப்படும் என்றும் இந்த டிரோன்கள் பெண் காவலர்களால் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, காவல்துறை ரோந்துப் பணிக்காக டிரோன்களை பயன்படுத்துவதும், பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் கண்காணிப்பு பயன்படுத்தப்படுவதும் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தெரிய வருகிறது.
முடிவு:
பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் கண்காணிப்பு பயன்படுத்தப்படுவது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான் என்பதை மறைத்து, தவெக அரசுதான் இந்தியாவிலே முதன்முறையாக அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதாக தவறாக பரப்பப்படுகிறது.