யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சரக்கு லாரியில் ஆட்களை ஏற்றி வந்த வாகனத்தை விரைவு சாலையில் அனுமதிக்காததால், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வங்கதேசத்தில் ஏற்பட்ட பிரச்சனை.
பரவிய செய்தி
இந்துக்களாகிய நாம் கவனிக்க வேண்டியவை. அந்நிய மத ஓட்டு வங்கி, என்ற ஆயுத மேந்திய போரை, மதச்சார்பின்மை என, இந்து ஓட்டு வங்கியின்றி, நிராயுதபாணியாக எதிர்த்து, களமாடி, தோற்று, நாளை, சொந்த சந்ததிகளை, நாடற்றவரகளாக விட்டுவிட்டு போகப் போகிறோமா, இந்த மண்ணின் மைந்தர்களான இந்துத்வ மக்களாகிய நாம்.
விரிவான விளக்கம்
முஸ்லிம் ஆண்கள் உள்ள ஒரு வாகனம் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டபோது, வாகனத்தில் வந்தவர்கள் தடுப்புக்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியில் தோற்று நாளைய இந்து சந்ததியினரை நாடற்றவர்களாக விட்டுவிட்டுப் போகப் போகிறோமா? என மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இவ்வீடியோவை குறிப்பிட்டு வேறு சில பதிவுகளில் இது குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த என்றும் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், இது பற்றி ’Dhaka Tribune’ என்ற ஊடகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.

வங்கதேசத்தில் உள்ள டாக்கா விரைவுச் சாலையில் சரக்கு வாகன ஒன்று 30-40 பேரை ஏற்றிச் சென்றுள்ளது. அது குரில் (Kuril) என்னும் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாளர்களால் நிறுத்தப்பட்டு, இப்படி பயணம் செய்தால் விபத்து நேரிடும் எனக் கூறி, விரைவுச் சாலையில் செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அங்கிருந்த தடுப்புகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வங்கதேச விரைவுச் சாலை அதிகாரி ஒருவர் அளித்த விளக்கம் ’Channel 24’ என்ற ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அந்த வாகனம் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
மேற்கண்ட செய்திகளிலிருந்து இச்சம்பவம் வங்க தேசத்தில் நடந்தது என்பதை அறிய முடிகிறது. இதனை இந்தியாவில் நடந்ததாக மத ரீதியில் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
இந்தியாவில் சரக்கு லாரியில் வந்த முஸ்லிம்கள் சுங்கச்சாவடி தடுப்புக்களை உடைத்து பணியாளர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது வங்க தேசத்தில் சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் சரக்கு லாரியில் பயணம் செய்த பயணிகளுக்கும் இடையே நடந்த ரகளையின் போது பதிவான சிசிடிவி காட்சியாகும். இதனை மத ரீதியாகத் தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர்.