யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சாய்ந்த நிலையில் உள்ள இந்த நீர்த்தேக்கத் தொட்டி தெலுங்கானா மாநிலத்தின் நாகர்கர்னூல் என்னும் மாவட்டத்தில் உள்ளது.
பரவிய செய்தி
முதல் படம்... பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். இரண்டாவது படம்... பைசாவை கொள்ளை அடித்ததால் சாய்ந்த கோபுரம்.

விரிவான விளக்கம்
இத்தாலி நாட்டில் சாய்ந்த நிலையில் உள்ள பைசா கோபுரத்தின் (Tower of Pisa) புகைப்படம் ஒருபக்கமும், சாய்ந்த நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் புகைப்படம் மற்றொரு பக்கமும் உள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ’பொதுக் கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்யப்படுவதால் இவ்வாறான சாய்ந்த நீர்த்தேக்கத் தொட்டி தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளதாக’ பரப்பப்படுகிறது.
முதல் படம்...
பைசா நகரத்து
சாய்ந்த கோபுரம்.
இரண்டாவது படம்...
பைசாவை
கொள்ளை அடித்ததால் சாய்ந்த கோபுரம். pic.twitter.com/5SIHF41WJu
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடியதில், ‘V6 News Telugu’ என்ற யூடியூப் தளத்தில், ஒரு செய்தி வீடியோவைக் காணமுடிந்தது. அதில், ’பகீரதா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழாவிற்கு முன்பாகவே சாய்ந்துள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடியதில், ‘The NEWS Minute’ செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், ‘தெலுங்கானாவின் நாகர்கர்னூல் என்ற மாவட்டத்தில் உள்ள திண்டிசிந்தபள்ளி என்ற கிராமத்தில் ’பகீரதா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 30 டிகிரி வரை சாய்ந்துள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 15 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் அடிக் கட்டுமானம் பலவீனமான மண்ணில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வாறு சாய்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த நீர்த்தேக்கத் தொட்டி உறுதியாக இருப்பதாகவும், இதனால் பொது மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் அந்தப் பகுதியின் பகீரதா திட்டத்தின் நிர்வாகப் பொறியாளர் ஸ்ரீதர் ராவ் தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்த புகைப்படத்தில் சாய்ந்த நிலையில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது என்பதும் தமிழ்நாட்டில் அல்ல என்பது தெளிவாகிறது.
முடிவு:
தெலுங்கானா மாநிலத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தமிழ்நாட்டில் உள்ளதாக திரித்துப் பரப்புகிறார்கள்.