யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த போஸ்டர் 2018ம் ஆண்டு ஒட்டப்பட்டது. அன்றைய தேதியில் PFI அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.
பரவிய செய்தி
இந்தியாவில் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், எப்படி இவர்கள் மதுரை "திருப்பரங்குன்றம்" சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள்??? இந்த போஸ்டர் ஒட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது??? இந்த அமைப்பு மதுரைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறுவதற்கு முன் இதை தீவிர கண்காணித்து, யார் யார் இந்த அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ அவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டும்.

விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக்கூடாது, கந்தூரி கொடுக்கக் கூடாது என இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தடை செய்யப்பட PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளதாகப் புகைப்படம் ஒன்றை இந்து மக்கள் கட்சி மற்றும் வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

அந்த போஸ்டரில், “தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே! சிக்கந்தர் மலை மீது உள்ள பள்ளியில் தொழுகை வழிபாடு நடத்துவதை நிறுத்தும் திருப்பரங்குன்றம் காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடு! முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையில் பாரபட்சம் காட்டாதே! முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்தாதே!” என்றுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய போஸ்டரை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இதே போஸ்டர் 2018, நவம்பர் மாதம் ’முகநூல் இந்து மீடியா’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
திருப்பரங்குன்றம் மலையின் மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபடுவது தொடர்பாகப் பல ஆண்டுகளாக இந்துத்துவா அமைப்பினர் சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். இப்படி தொழுகை நடத்துவதைத் தடை விதிக்க வேண்டுமென அளிக்கப்பட்ட மனு மீது 2023, ஜூன் மாதம் கூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில் தொழுகை நடத்தத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்படி 2018ம் ஆண்டு சர்ச்சைகள் எழுந்தபோது PFI அமைப்பு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. அப்போதும் இந்துத்துவா அமைப்புகள் மத ரீதியான பிரிவினையைத் தூண்டும் வகையில்தான் சமூக வலைத்தளத்தில் அந்த போஸ்டரை பதிவிட்டுள்ளன.
அன்றைய தேதியில் PFI அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. 2022, செப்டம்பர் மாதம் தான் தடை செய்யப்பட்டது. இவற்றிலிருந்து பரப்பப்படும் போஸ்டர் PFI அமைப்பு தடை செய்யப்படுவதற்கு முன்னர் ஒட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
சுமார் 6 ஆண்டுகள் பழைய போஸ்டரை தற்போது பதிவிட்டு, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு தமிழ்நாட்டில் செயல்படுவது போன்று வதந்தியைப் பரப்புகின்றனர்.
சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் முன்னெடுக்கும் மத அரசியல் குறித்து யூடர்ன் யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளோம்.
முடிவு:
இந்த போஸ்டர் 2018ம் ஆண்டு ஒட்டப்பட்டது. அன்றைய தேதியில் PFI அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. 2022, செப்டம்பரில் தான் தடை செய்யப்பட்டது.