யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இரண்டு வெவ்வேறு நபர்களின் சம்பந்தமில்லாத வீடியோக்களைக் கொண்டு Edit செய்து உருவாக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
வீராப்புக்கு மாட்டு சாணம் சாப்பிட்டு அடுத்த நாள் மருத்துவமனையில் படுத்திருக்கான் இந்த சங்கி.

விரிவான விளக்கம்
முதல் காட்சியில் நபர் ஒருவர் மாட்டு சாணத்தை தட்டில் வைத்து சாப்பிடுகிறார். பின்னர் அடுத்த காட்சியில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு படுத்திருக்கிறார். இந்த இரண்டு காட்சியில் அடங்கிய சிறிய வீடியோவை பதிவிட்டு, சங்கப் பரிவார ஆதரவாளர் ஒருவர் மாட்டு சாணத்தை சாப்பிட்டு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக காட்டப்படும் காட்சியின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Go Fund Me’ என்ற தளத்தில் ’Repatriation of dead body’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை காணமுடிந்தது. இந்த புகைப்படம் அந்த காட்சியில் இருப்பதுடன் ஒத்துப்போகவதாக இருந்தது.

அந்த புகைப்படத்தின் கீழ் உள்ள குறிப்பில், ‘இந்த நபரின் பெயர் பிதான் தாபா. நேபாளத்திலிருந்து அமெரிக்கா வந்த இவர், 2017 ஜூலை 7ஆம் தேதியன்று மாரடைப்பு (cardiac arrest) ஏற்பட்டு ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி இறந்துவிட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், அந்த வீடியோவில் மாட்டுச் சாணம் சாப்பிடும் நபர் குறித்து இணையத்தில் தேடியதில், ‘Dr Manoj Mittal Karnal’ என்ற யூடியூப் பக்கத்தில் இவரது வீடியோக்களைக் காணமுடிகிறது. இந்த ’மனோஜ் மிட்டல்’ என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘மாட்டுச் சாணம் உடலை தூயமைப்படுத்தும் என்று மனோஜ் மிட்டல் வெளியிட்டுள்ள வீடியோ பற்றியும் அதற்கு இணையத்தளத்தில் வந்த எதிர்ப்புகள் பற்றியும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேபோல், மனோஜ் மிட்டல் மாட்டுச் சாணம் சாப்பிடும் வேறு வீடியோவும் இணையத்தில் உள்ளது.
Gobar kha lo friendssss 😂 pic.twitter.com/azNw47R9Af
மேலும், 'Forbes’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் மிட்டல் பசுமாட்டு சாணம் சாப்பிட்ட இந்த வீடியோ பற்றி எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்தி, மாட்டுச் சாணம் கொரோணா தொற்றை குணப்படுத்தும் என்று இந்தியாவில் மூடநம்பிக்கை பரப்பப்பட்டு வருவது குறித்தும் பேசுகிறது. மாட்டுச் சாணத்தில் இருக்கும் பல்வேறு நுண் கிருமிகள் நோய்த்தொற்றுகளை மனிதர்களுக்கு உண்டாக்கும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் வீடியோவில் இருப்பது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத இரண்டு வெவ்வேறு நபர்கள் என்பது உறுதியாகிறது.
முடிவு:
இரண்டு வெவ்வேறு நபர்களின் சம்பந்தமில்லாத வீடியோக்களைக் கொண்டு Edit செய்து உருவாக்கப்பட்ட வீடியோ இது. இதனைக் கொண்டு மாட்டு சாணம் சாப்பிட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறாக பரப்பப்படுகிறது.