யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024ஆம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற வரும்போது ஐ.நா தூதுவர்கள் வெளிநடப்பு செய்ததை தற்போதைய செய்தி என தவறாக பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை...!!
நெதன்யாகுவின் உரையின் போது ஐ.நா. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விரிவான விளக்கம்
கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் காஸா மீது இன அழிப்பு போரை நடத்தி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 23 மாதங்களாக அமெரிக்காவின் ஆதரவுடன் இந்த இன அழிப்பு போரை நடத்தி வருகிறார். இதனால் பெண்கள் குழந்தைகள் உட்பட 65,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பல நாடுகள் இஸ்ரேல் செய்து வரும் இந்த இன அழிப்புப் போரை கண்டித்து வருகின்றன.
இந்நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா மன்றத்தில் பேசத் தொடங்கும் போது, அங்குள்ள உறுப்பினர்கள் பலர் எழுந்து வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அதனை பார்வையாளர்கள் கைதட்டி கொண்டாடுகிறார்கள்’. இந்த சம்பவம் சமீபத்தில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘Guardian News’ என்ற யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2024 செப்டம்பர் 27ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ’இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற வரும்போது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இருந்து ஏராளமான தூதர்கள் வெளிநடப்பு செய்தனர்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடுகையில், ‘The Guardian’ பத்திரிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது. இதிலும் மேற்கூறிய அதே செய்தி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதாவது பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற வரும்போது ஐ.நா தூதுவர்கள் வெளிநடப்பு செய்த இந்த நிகழ்வு கடந்த 2024ஆம் செப்டம்பர் 27ஆம் தேதி நடந்துள்ளது.

மேலும் ஓராண்டுக்கு முன்னால் நடந்தது போலவே, தற்போது 2025 செப்டம்பர் 26ஆம் தேதியன்று ஐ. நா மன்றத்தில் நெதன்யாகு உரையாற்ற மேடைக்கு வந்த போது, பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் தூதுவர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போதைய வெளிநடப்பு சம்பவத்தை பழைய வீடியோவை இணைத்து பரப்பி வருகின்றனர்.
முடிவு:
கடந்த 2024ஆம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற வரும்போது ஐ.நா தூதுவர்கள் வெளிநடப்பு செய்ததை தற்போதைய செய்தி என தவறாக பரப்புகிறார்கள்.