YouTurn

தேர்தல் முடிந்த பின் கள்ளக்குறிச்சியில் கோவில்களை மட்டும் இடித்ததாகப் பரவும் பொய் செய்தி!

தேர்தல் முடிந்த பின் கள்ளக்குறிச்சியில் கோவில்களை மட்டும் இடித்ததாகப் பரவும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

பலரின் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் திமுக அரசு இந்து கோவிலை (விநாயகப் பெருமானை) அழித்துவிட்டது, கோயில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள், கோவிலைச் சுற்றி பல கட்டிடங்கள் உள்ளன, ஆனால் கோயிலை மட்டுமே குறிவைத்து தாக்கினர். தேர்தல் முடிந்ததும் அழித்துள்ளார்கள்.

X Link | Archive Link


விரிவான விளக்கம்

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல்கள், ஜூன் 01 அன்று முடிவுக்கு வந்தன. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் விநாயகர் கோவிலை இடித்த அரசு என்று கூறி 2:00 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருந்தும், அரசு பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கோவிலை மட்டும் இடித்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ குறித்து தேடியதில், கள்ளக்குறிச்சியில் உள்ள காந்தி சாலையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் மற்றும் தர்ம சாஸ்தா கோவில்களை இடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது என்பதை அறிய முடிந்தது.

இது குறித்து நக்கீரன் ஊடகம், ஜூன் 02 அன்று "நீதிமன்ற உத்தரவு; கோவில், கடைகளை இடித்து தரமட்டமாக்கிய அதிகாரிகள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி நகர் காந்தி சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியின் பாசன கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டதால், கடந்த 2020ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கக்கோரி சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து, 8 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நீங்களே ஆக்ரமிப்பை அகற்றிக்கொள்ளுங்கள், நாங்கள் அகற்றினால் அதற்கான செலவுத் தொகையை உங்களிடம் வசூலிப்போம் என நீர்வளத்துறை சார்பில் கடந்த மே 16ம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில் அகற்றாத கட்டங்கள் கடந்த 28ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.



இதே போன்று தினமலர் வெளியிட்டுள்ள செய்தியிலும், காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.

தாமாக இடித்துக்கொள்ளும்படி உத்தரவிட்டும் பல கடைகள் இடிக்கப்படாமல் இருந்தன. எனவே கடந்த மே 28ம் தேதி பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு டீக்கடை, இரண்டு மருந்து கடைகளை இடித்து அகற்றினர். இந்நிலையில், காந்தி ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோவில்கள் அகற்றப்படுவதாக நேற்று முன்தினம் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு, அதன்படி கோவில்கள் இடிக்கப்பட்டன என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதன் மூலம் கள்ளகுறிச்சியில் தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரண்டு கோவில்கள் மற்றும் 36 கட்டடங்களை இடிக்கவேண்டும் என்று 2020 இல் போடப்பட்டிருந்த வழக்கிற்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதையும், அதன்படி கோவில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.

முடிவு:

நம் தேடலில், தேர்தலுக்கு பின் கோவிலை இடித்த தமிழ்நாடு அரசு, கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை மட்டும் இடிக்கவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க