யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
10 லட்சம் குழந்தைகள் பிறந்தால் அதில் 82,000 குழந்தைகள் இறப்பதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சொன்ன தகவல் தவறானது.
பரவிய செய்தி
ஆயிரம் குழந்தைகளில் 8 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விடுகின்றன. 10 லட்சம் குழந்தைகள் என வைத்துக் கொண்டால் 82,000 குழந்தைகள் ஒரு ஆண்டில் இறந்துவிடுகிறார்கள்.

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மேடையில் பேசும் போது, “ஆயிரம் குழந்தைகளில் 8 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விடுகின்றன. ஐயா மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல். ஒரு லட்சம் குழந்தைகளில் 8200 குழந்தைகள் பிறந்ததும் இறந்துவிடுகின்றன. வருடத்திற்கு 10 லட்சம் குழந்தைகள் என வைத்துக் கொண்டால் 82,000 குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
உண்மை என்ன?
பரவக் கூடிய தகவல் குறித்துத் தேடியதில், கடந்த ஜனவரி மாதம் ‘தி இந்து’ ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காண முடிந்தது. தமிழ்நாட்டில் 2020ம் ஆண்டு குழந்தை இறப்பு விகிதம் (IMR) 1,000 பிறப்புகளுக்கு 13-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2023, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 8.2 ஆகக் குறைந்துள்ளது எனத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனைக் கொண்டுதான் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் மேடையில் பேசியுள்ளார். ஆனால், அவர் சொல்லும் எண்ணிக்கை தவறு. அமைச்சர் சொன்ன தரவின்படி பார்த்தால், ஒரு லட்ச குழந்தைகள் பிறந்தால் அதில் 820 குழந்தைகள் இறக்கின்றன. அதே போல் 10 லட்சம் குழந்தைகள் பிறந்தால் அதில் 8,200 இறக்கின்றன. இந்த எண்ணிக்கையை 10 மடங்கு மிகைப்படுத்தி 82,000 குழந்தைகள் இறப்பதாகத் தவறான தகவலை மேடையில் பேசியுள்ளார்.
மேற்கொண்டு தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் (IMR) குறித்த தரவுகளை ஆய்வு செய்தோம். Sample Registration System (SRS) வெளியிட்ட தரவுகளைக் கொண்டு ஒன்றிய அரசின் PIB தளத்தில் 2022, பிப்ரவரியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் முறையே 19-ல் இருந்து 15-ஆகக் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதைக் காண முடிகிறது.

இவ்விகிதம் 2020ம் ஆண்டு மேலும் குறைந்து 13ஆக உள்ளது. அதே ஆண்டில் இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 28-ஆக உள்ளது.
மேற்கண்ட தரவுகள் மற்றும் அமைச்சர் கூறிய தகவல் ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் மக்கள் மத்தியில் வதந்தி பரப்புகிறார்.
முடிவு:
தமிழ்நாட்டில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்தால் அதில் 82,000 குழந்தைகள் இறப்பதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சொன்ன தகவல் தவறானது. 2020ம் ஆண்டு தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 13 ஆக இருந்தது. 2023 ஏப்ரல் - டிசம்பரில் 8.2-ஆகக் குறைந்துள்ளது.