யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாரும்மூடு-நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு கிறிஸ்துமஸ் கரோல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேரணி சென்ற கிறிஸ்துவர்கள் மீது இடதுசாரி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்றை 'தமிழ் ஜனம்' ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
#Attack | #Christmas | #Kerala | #Alappuzha | #Communistsattack | #Tamiljanam pic.twitter.com/m9hYJtPhW5
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ்கார்டில் உள்ள புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “India Today“ ஊடகப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
டிசம்பர் 25, 2025 அன்று “India Today“ வெளியிட்டுள்ள செய்தியில், “கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாரும்மூடு-நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு கிறிஸ்துமஸ் கரோல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போது இரண்டு கரோல் குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது உடல் ரீதியான சண்டையாக மாறியது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, “NDTV“ ஊடகத்திலும் பரவி வரும் புகைப்படம் குறித்து வீடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “கேரளாவின் நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இளைஞர் சங்கத்திற்குள் நீண்ட காலமாக இருந்த தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவத்தனர்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேரணி சென்ற கிறிஸ்துவர்கள் மீது இடதுசாரி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக ‘தமிழ் ஜனம்’ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி தவறானது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாரும்மூடு-நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு கிறிஸ்துமஸ் கரோல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.