யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2015ஆம் ஆண்டு நடந்த இந்த பழைய சம்பவத்தை தற்போது நடந்த ஒன்றாகத் தவறாகப் பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
சென்னை காரணீஸ்வரர் கோயிலின் பூசாரி சண்முக குருக்கள் அவர்களின் தந்தை நேற்று மாலை கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது சுமார் 6- 6.30 மணி அளவில் தி.க-வினைச் சேர்ந்த சுமார் 20 நபர்கள் பைக்கில் வந்து அவருடைய பூணூலினை அறுத்து எறிந்துவிட்டு, அவரை அடித்து கீழே தள்ளிவிட்டுச் சென்றனர்.

விரிவான விளக்கம்
கோவில் அர்ச்சகர்கள் காவல்துறையிடம் புகார் கொடுக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘சமீபத்தில் மாலை நேரத்தில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த சென்னை காரணீஸ்வரர் கோயிலின் அர்ச்சகர் சண்முக குருக்களின் தந்தையை, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நபர்கள் மோட்டர் சைக்கிள்களில் வந்து தாக்கி அவரது பூணூலை அறுத்து எறிந்தனர். இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று‘ எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
’அர்ச்சகர்’, ’திராவிடர் கழகம்’, ’பூணூல் அறுப்பு’ ஆகிய Keywords கொண்டு இணையத்தில் தேடுகையில், ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் இது தொடர்புடைய செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

2015 ஏப்ரல் மாதம் வெளியான அந்த செய்தியில், ‘சென்னை காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் விஸ்வநாத குருக்கள் என்பவரை மோட்டர் சைக்கிள்களில் வந்த சிலர், திடீரென தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாக’ குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்து அதேநாளில், மேற்கு மாம்பலத்தில் சந்தான கோபாலன் என்பவரும் இதேபோல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், ’இது சம்பந்தமாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது’ என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து மேலும் தேடியதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இதுபற்றிய அறிக்கைகளைக் காண முடிந்தது. இந்த சம்பவம் குறித்து 2015 ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று தி.வி.க.வின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த பூணூல் அறுப்பு, திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு உடன்பாடானது அல்ல. இதை அவர்கள் செய்திருக்கக்கூடாது என்பதே திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2015 அக்டோபர் 8ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் ’இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கோபிநாத், திவாகர், நந்த குமார், பிரவீன், பிரபாகரன் ஆகிய 6 பேர் பிணை வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலை ஆனது’ பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் முன்பாக குறிப்பிடப்பட்டுள்ள பிபிசி செய்திக் குறிப்பில் ”திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த அருள் என்பவர் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இதுபோன்ற சம்பவங்களைத் தூண்டி விடுகிறது” என்று ஊடகங்களிடம் பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு நடந்த பழைய சம்பவம் என்பது தெளிவாகிறது.
முடிவு:
2015ஆம் ஆண்டு நடந்த இந்த பழைய சம்பவத்தை தற்போது நடந்த ஒன்றாகத் தவறாகப் பரப்புகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டது திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.