யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ ஒரு மாதம் பழைய வீடியோ. இதில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல.
பரவிய செய்தி
‘விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் சிறுவர்கள் போதை தலைக்கேறிய நிலையில், சக சிறுவனை மிருகத்தனமாக தாக்கும் இந்த காணொளி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ‘தெருவெங்கும் போதை' இதுதான் இன்றைய #திராவிடமாடல் ஆட்சியின் சாதனை. தமிழ்நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் தாராளமாக கஞ்சா கிடைக்கிறது. என்பதற்கு இந்தச் சிறுவர்களே சாட்சி’ - S.G.சூரியா, தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர்.
#DMKFails

விரிவான விளக்கம்
சிறுவர்கள் இரண்டு பேரை மற்ற சிறுவர்கள் சிலர் கடுமையாக தாக்கி, மிரட்டல் விடுக்கும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர் என்னும் கிராமத்தில் போதை தலைக்கேறிய நிலையில், சிறுவர்கள் சக சிறுவனை மிருகத்தனமாக தாக்கிக்கொள்கிறார்கள்’ என்றும் ‘இது தமிழ்நாடு முழுவதும் சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும் போதைக் கலாச்சாரம் தலைவிரித்தாடுவதை குறிப்பதாக இருக்கிறது’ என்றும் தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் S.G.சூரியா பரப்பிவருக்கிறார்.

உண்மை என்ன?
’விருதுநகர் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு இடையில் அடிதடி’ என்று இணையத்தில் தேடிய போது, ’தந்தி டிவி’ யூடியூப் தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
2025 டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், “விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலிநாயக்கனூரில் கஞ்சா புகைப்பதை காட்டிக் கொடுத்ததாக சொல்லி இரண்டு சிறுவர்களை தாக்கிய நான்கு சிறுவர்கள் மீது வழக்கு பதிவு’ என்றும் ’ஆபாசமாக பேசியது, தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தியது, மிரட்டல் விடுத்தது ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்’ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தேடியபோது ’விருதுநகர் மாவட்ட போலீஸ்’ அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணமுடிந்தது. அதில் ’இந்த சம்பவம் 15.12.2025ம் தேதியன்று நடந்ததாகவும், அது பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் தொடர்பான பிரச்சினை என்றும் இது தொடர்பாக 17/12/2025 அன்று ஆமத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ’இச்சம்பவத்தின் போது சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியதாகப் பரப்பப்படும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளதோடு, ’பழைய வீடியோக்களைத் தற்போது நடந்ததாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உண்டாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ ஒரு மாதம் பழைய வீடியோ என்பதும், இதில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
ஒரு மாதம் பழைய வீடியோவை தற்போது நடந்ததாகவும், போதையில் சிறுவர்கள் சக சிறுவனை தாக்குவதாகவும் தவறான தகவலை பரப்பிவருகிறார் S.G.சூரியா.