யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதியவர் ஒருவர் பெண்ணை தகாத முறையில் இடித்துவிட்டு செல்வதும், அதற்காக அந்த பெண் முதியவரை கண்டிப்பதுமாக சித்தரிக்கப்பட்ட காணொளி, முஸ்லிம் ஆண்களை மோசமானர்கள் என்று பிரச்சாரம் செய்யும் வகையில் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
ஹிஜாபும்,புர்காவும் பெண்களை சாதாரண ஆண்களிடமிருந்து பாதுகாக்கிறது. ஆனால் முஸ்லிம் ஆண்களிடமிருந்து அல்ல…
விரிவான விளக்கம்
பாலத்தில் ஒரு முதியவர் வேகமாக நடந்து செல்லும் போது புர்கா அணிந்து நின்றுகொண்டிருக்கும் பெண்ணை தவறான முறையில் இடித்துவிட்டு செல்கிறார். அதற்காக அந்த முதியவரின் சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறார் அந்தப் பெண். "புர்கா அணிவதால் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தைச் சேர்ந்த ஆண்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம். ஆனால், முஸ்லிம் ஆண்களிடமிருந்து அவர்களை புர்கா காப்பாற்றாது", என்று பொருள்படும் வகையில் இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
அந்த காணொளியின் key frame-களைக் கொண்டு தேடுகையில், ’Azizul 2.0’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 5, 2024 அன்று “இந்த முதியவர் என்ன செய்கிறார்?” என்று எழுதி இந்தக் காணொளி பதிவிடப்பட்டிருப்பதை கண்டோம்.
மீண்டும் அதே காணொளி அதே பேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 11, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அந்த பக்கத்தை தேடியதில், செப்டம்பர் 12, 2024 அன்று, அதேபோன்றதொரு பாலத்தில் மேற்குறிப்பிட்ட அந்த பெண்ணும், முதியவரும் சேர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் காணொளி பதிவிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில் இருக்கும் முதியவரும் ஒரு பெண்ணும் உரையாடிக் கொண்டிருக்கும் பல காணொளிகள் அந்த பேஸ்புக் பக்கத்தில் காணக்கிடக்கிறது.

இதிலிருந்து, அந்த காணொளி உண்மைச் சம்பவம் அல்ல, அது சித்தரிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இதேபோல் சமூக வலைதளங்களில் பல சித்தரிக்கப்பட்ட காணொளிகள் பரப்பப்பட்டுள்ளது. அதுபற்றிய உண்மைகளை நமது யூடர்ன் தளத்தில் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளோம்.
முஸ்லிம் ஆண்கள் மோசமானவர்கள் என்று அர்த்தப்படும் வகையில் அந்த காணொளி பரப்பப்படுவது தவறானது.
முடிவு:
பெண்ணிடம் முதியவர் தவறாக நடந்துகொண்டார் என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது. அந்த காணொளி சித்தரிக்கப்பட்ட ஒன்று.
