யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சித்தரிக்கப்பட்ட வீடியோவை (Staged Video) விளாத்திகுளம் அருகில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ என்று தவறாக பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
இந்த வீடியோவ பாருங்க டா உன் அக்காவோ தங்கச்சியோ உன் மகளோ இந்த நிலைல வச்சு நினச்சு பாருங்க டா உங்களுக்கு அடுத்த பிள்ளையை தொடனும் என்ற எண்ணமே வராது தயவு செஞ்சு பெண் பிள்ளைகளை நாசம் பண்ணாதீங்க டா நாசமா போரவனுங்களா யாருக்குடா பொறந்தீங்க இந்த ஆட்சி தொடர வேண்டுமா, அகற்றப்பட வேண்டும்.

விரிவான விளக்கம்
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரு நடுத்தர வயது பெண்ணின் மடியில் பள்ளி சீருடை அணிந்திருந்த மாணவி மயக்க நிலையில் இருப்பது போலும், அந்தப் பெண் கதறி அழுவது போன்றும் காட்சிபடுத்தப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, குளத்தூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் உடலை மடியில் வைத்து அவரது தாயார் அழுவதாக பரப்புகிறார்கள்.
இந்த வீடியோவ பாருங்க டா உன் அக்காவோ தங்கச்சியோ உன் மகளோ இந்த நிலைல வச்சு நினச்சு பாருங்க டா உங்களுக்கு அடுத்த பிள்ளையை தொடனும் என்ற எண்ணமே வராது தயவு செஞ்சு பெண் பிள்ளைகளை நாசம் பண்ணாதீங்க டா நாசமா போரவனுங்களா யாருக்குடா பொறந்தீங்க #இந்த ஆட்சி தொடர வேண்டுமா
அகற்றப்பட வேண்டும் pic.twitter.com/oSqZrj7U5r
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில் ’dnm Madhu 786 ’ என்ற யூடியூப் பக்கத்தில் மார்ச் 1,2026 அன்று இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

அதில், தெலுங்கு மொழியில் இருந்த வார்த்தைகளை GoogleTranstale மூலம் மொழி பெயர்ந்து பார்த்ததில், ”அம்மாவின் அன்பை ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது. அதற்கு சம்மதம் என்றால் தயவுசெய்து ஒரு லைக் கொடுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் தெலுங்கில் இருப்பதை கவனித்தோம்.
இந்த வீடியோவின் கேமரா கோணம் மற்றும் ஒளியமைப்பு ஆகியவற்றை கவனித்தால், இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் தெளிவான மஞ்சள் ஒளியைக் காணமுடிகிறது. மேலும், கேமரா Zoom in zoom out செய்யப்படுவதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், வீடியோவின் முடிவில் “CUT” என்று சொல்வதை நம்மால் தெளிவாகக் கேட்கமுடிகிறது.
இவற்றிலிருந்து, பரவி வரும் வீடியோ சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
சித்தரிக்கப்பட்ட வீடியோவை தூத்துக்குடி குளத்தூர் அருகில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ என்று தவறாக பரப்புகிறார்கள்.
தவறான காணொளியை தவறான தகவலோடு பரப்பாதீர்!