யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விஜய் நடித்து வெளியான ‘’GOAT’’ படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்ததாகப் பரவும் சல்மான் கானின் டைகர் 3 படம்..!!
பரவிய செய்தி
தியேட்டருக்குள் பட்டாசு வெடிக்கும் விஜய் ரசிகர்கள்.. பத்திகிருச்சுன்னா மொத்தமா கரிக்கட்டையா போயிருப்பானுங்க..
இவனுங்களை வச்சுட்டா ஆட்சியை பிடிக்க போறீங்க?
தியேட்டருக்குள் பட்டாசு வெடிக்கும் விஜய் ரசிகர்கள்.. பத்திகிருச்சுன்னா மொத்தமா கரிக்கட்டையா போயிருப்பானுங்க.
.
இவனுங்களை வச்சுட்டா ஆட்சியை பிடிக்க போறீங்க? pic.twitter.com/iprP9A38Iu
விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மற்றும் நடிகரான விஜய் அவர்களின் 68வது படமாக 'கோட்' (GOAT) படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. சிறப்புக் காட்சிகளுடன் பல மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்திருந்தனர். அரசியல் கட்சி துவங்கிய பிறகு படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. இந்நிலையில் திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்கும் விஜய் ரசிகர்கள் என்று கூறி 1:26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.

உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து “Google Reverse Image Search” மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், ரசிகர்கள் பட்டாசு வெடிக்கும் காட்சி GOAT திரையிடலின்போது நடந்தல்ல என்பதை அறிய முடிந்தது.
பரவி வரும் இதே வீடியோவை குறிப்பிட்டு நவம்பர் 13ஆம் தேதி 2023, "தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து ரணகளம் செய்த ரசிகர்கள்.. அட்வைஸ் செய்த சல்மான் கான்" என்ற தலைப்பில் தினத்தந்தி செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
அதில், மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் உள்ள 'மோகன் சினிமாஸ்' எனும் திரையரங்கில் டைகர் 3 படம் பார்க்க வந்த ரசிகர்கள், நடிகர் சல்மான் கானின் அறிமுகக்காட்சியை கொண்டாடும் விதமாக திரையரங்குக்குள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். பட்டாசுகள் நாலாபுறமும் சீறிப் பாய்ந்ததால் இருக்கையில் உள்ள மக்கள் பயந்து அலறினர். அதனால் திரையரங்கில் பதற்றமான சூழ்நிலை உருவானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதுதொடர்பாக தேடியதில், The Economic Times யூடியூப் பக்கத்தில் “Salman Khan fans burst firecrackers during 'Tiger-3' screening in Malegaon theatre “ என்ற தலைப்பில் நவம்பர் 13ஆம் தேதி, 2023 அன்று வீடியோ ஒன்று பதிவு செய்திருப்பதை அறியமுடிந்தது.
மேலும், சல்மான் கானின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கங்களில் தேடியதில், அவரது எக்ஸ் பக்கத்தில் 2023,நவம்பர் 13 அன்று திரையரங்கினுள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. நமக்கும் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை பார்த்து ரசியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்" என்று பதிவிட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
I'm hearing about fireworks inside theaters during Tiger3. This is dangerous. Let's enjoy the film without putting ourselves and others at risk. Stay safe.
இவற்றிலிருந்து, விஜய் நடித்து வெளியான கோட்(GOAT) படத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கினுள் பட்டாசுகளை வெடித்ததாக பரவும் தகவல் உண்மையானது அல்ல என்பது உறுதியாகிறது.
முடிவு :
நம் தேடலில், திரையரங்கினுள் பட்டாசுகளை வெடித்து கோட் (GOAT) படத்தை கொண்டாடிய ரசிகர்கள் எனப் பரவும் தகவல் தவறானது. உண்மையில் இவை சல்மான் கான் நடித்து வெளியான ''டைகர் 3'' படத்தின் திரையிடலின்போது நவம்பர் 13,2023 அன்று நடந்த சம்பவம் என்பதை அறியமுடிகிறது.