யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞர்... ட்ரம்ப் நெஞ்சின் மீதும் குண்டு பாய்ந்ததா?
பரவிய செய்தி
டிரம்ப் நெஞ்சிலும் சுடப்பட்டது அவர் புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பினார்
விரிவான விளக்கம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரான, தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்ற இளைஞர் மூலம்தான் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று விசாரணையின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மேடையில் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது ஏஆர்-15 ரக துப்பாக்கியால் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் சுட்டுள்ளார். மொத்தம் 8 குண்டுகள் சுடப்பட்டதில், ஒரு குண்டு மட்டும் ட்ரம்ப் காதின் மேல்பகுதியை துளைத்தபடி சென்றது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் டொனால்ட் ட்ரம்ப் நெஞ்சின் மீதும் குண்டு பாய்ந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் அவருடைய கோட்டில் துளை இருப்பது வட்டமிடப்பட்டு, அங்குதான் குண்டு பாய்ந்துள்ளது என்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. மேலும் பரவி வரும் பதிவுகளில், "அவர் புல்லட் புரூஃப் கோட் அணிந்ததால்தான் உயிர்தப்பினார்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு "abcnews" தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், பதிவிடப்பட்ட புகைப்படத்தை நன்கு ஆய்வு செய்ததில், டொனால்ட் ட்ரம்ப் நெஞ்சின் மீது குண்டு பாயவில்லை என்பதை அறிய முடிந்தது. அவரை பாதுகாக்க சூழ்ந்த பல காவலர்களில், அவரின் முன்புறம் நிற்கும் ஒரு பெண் காவலரின் கோட்டில் ஏற்பட்ட மடிப்பே, அவ்வாறு துளைபோல காட்சித் தருகிறது.
இதே போன்று, 'APnews' இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியிலும், டொனால்ட் ட்ரம்ப் நெஞ்சின் மீது குண்டு எதுவும் பாயவில்லை என்பதை உறுதி செய்யமுடிகிறது.

மேலும் இதுகுறித்து மற்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளிலும் , "ட்ரம்பின் தலை நேராக இருந்திருந்தால், அது காதுக்குள் சென்று அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். அவர் திரும்பிவிட்டதால் அது அவர் உயிரைக் காப்பாற்றியது" என்று மட்டுமே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். சுமார் 400 அடி தொலைவில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்தபடி, ஏஆர்-15 ரக துப்பாக்கியால் ட்ரம்ப் சுடப்பட்டுள்ளார். முதல் சுற்றில் 3 குண்டுகள், 2-வது சுற்றில் 5 குண்டுகள் என மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்துள்ளன என்பதையும், இதில் ஒரு குண்டு மட்டும் ட்ரம்ப்பின் வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி சென்றுள்ளது என்பதையும் அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், துப்பாக்கிச்சூட்டில் டொனால்ட் ட்ரம்ப் நெஞ்சின் மீதும் குண்டு பாய்ந்ததாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
