யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயரை “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றப்படவில்லை. பள்ளியின் பெயர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி என்றே உள்ளது. மேலும் அவர் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனப் பரவுவதும் தவறான தகவலே.
பரவிய செய்தி
இப்படித்தான் இந்தியாவில் பல ஊர்களின் பெயர்கள், தெரு பெயர்கள், நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, ஹிந்துக்களின் கோயில்கள் அபகரிக்கப்பட்டு இன அழிப்பு நடத்தப்பட்டது.
விரிவான விளக்கம்
“ஹாஜி கருத்தா ராவுத்தர் என்று அழைக்கப்பட்ட எஸ். முகமது மீரா ராவுத்தர் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர் பெயரை ஏன் நுழைவுவாயில் வளைவுகளில் (Arch) வைக்க வேண்டும். மேலும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயரை “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றிவிட்டனர். இப்படி தான் இந்தியாவில் பல ஊர்களின் பெயர்கள், தெரு பெயர்கள், நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, இந்துக்களின் கோயில்கள் அபகரிக்கப்பட்டு இன அழிப்பு நடத்தப்பட்டது” என்றும் கூறி வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
குமாரசாமி கவுண்டர் இலவசமாக நிலம் குடுத்தாரு பள்ளிக்கு, அதனால அவர் பேரு. ஒரு ஆணியும் புடுங்காத ராவுத்தர் பேர் என்ன மயித்துக்கு நொட்டியிருக்குனு தான் கேள்வி??? https://t.co/SiwKGXU1Li
உண்மை என்ன?
ஹாஜி கருத்தா ராவுத்தர் குறித்தும், அவர் மக்களுக்கு செய்த உதவிகள் குறித்தும் ஆய்வு செய்ததில், 1950 ஆம் ஆண்டில், உள்ளூர் வாரிய உயர்நிலைப் பள்ளி நிரந்தரக் கட்டிடம் இல்லாததால் மூடப்படும் நிலையில் இருந்தபோது, ஹாஜி கருத்த ராவுதர் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடத்தைக் கட்ட முன்வந்துள்ளதையும், மதுரை மாவட்ட வாரியம் அவரது நினைவாகப் பள்ளிக்கு 'கருத்த ராவுதர் ஹவுடியா உயர்நிலைப் பள்ளி' என்று பெயரிட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
இதே போன்று அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு ரூ.75000/- மதிப்புள்ள ஒரு கட்டிடத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளார். 1954 உத்தமபாளையத்தில் ஒரு கல்லூரியைத் தொடங்க மதுரை மாவட்ட வாரியத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதே போன்று கல்லூரி கட்டுவதற்கும் 58 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அடுத்ததாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயர் “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றப்பட்டதாக பரவும் செய்திகள் குறித்தும் ஆய்வு செய்தோம். அதன்படி, “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” பள்ளி என்று பெயர் எதுவும் மாற்றப்படவில்லை. பள்ளியின் பெயர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி என்றே உள்ளது என்பதை அறிய முடிந்தது.

அவரது நினைவாக இப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பாலான நுழைவு வாயில் இருந்தது. அந்த நுழைவுவாயில் சேதமடைந்ததால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி நிர்வாகத்தினரால் புதிய நுழைவு வாயில் அமைத்துத் தரப்பட்டது. இந்நிலையில் நுழைவு வாயில் மாற்றப்பட்டதை, பள்ளியின் பெயரே மாற்றப்பட்டது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
அரசு பள்ளிக்கு 12 ஏக்கர் நிலம் தானம் செய்த இஸ்லாமியர் பெயரில் வளைவு - பெயர் மாற்றம் என்று வதந்தி !
பரவும் செய்தி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயரை “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றிவிட்டதாக ஒருவர் பேசும் காணொளி சமூக வலைத்தளங்களில்… https://t.co/Fi0zwhtemi pic.twitter.com/2plNF6YiN0
மேலும் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த 1924 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த அரசுப் பள்ளிக்கு 12 ஏக்கர் நிலத்தை ஹாஜி கருத்தராவுத்தர் அவர்கள் தானமாக வழங்கியுள்ளார். இதனைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பாராட்டுக் கேடயமும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
நம் தேடலில், ஹாஜி கருத்தா ராவுத்தர் என்று அழைக்கப்பட்ட எஸ். முகமது மீரா ராவுத்தர் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை. இதே போன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயரை “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றிவிட்டதாக பரவி வரும் செய்திகளும் தவறானவையே.