YouTurn

விவசாய பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ததா தவெக அரசு? தவறான செய்தியை பரப்பும் ‘புதிய தலைமுறை’!

விவசாய பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ததா தவெக அரசு? தவறான செய்தியை பரப்பும் ‘புதிய தலைமுறை’!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எங்குமே பயிர்க்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.

பரவிய செய்தி

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 11.40 லட்சம் விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திருக்கிறார் முதல்வர் விஜய்!



Instagram Link


YouTube Link


விரிவான விளக்கம்

தவெக தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ளவற்றில் விவசாய கடன் தள்ளுபடி முக்கியமானதாகும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் அவர்களது நிலவுரிமை வரம்பின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படுவதாக தவெகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; 5 ஏக்கருக்குக் அதிகமாக நிலம் இருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்  என்றும் தவெக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


கடந்த மே 25ஆம் தேதி விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய  முதல்வர் விஜய் உத்தரவிட்டதாக ‘புதிய தலைமுறை’ ஊடகம் உட்பட பலர் பரப்பி வருகிறார்கள்.




உண்மை என்ன?


முதல்வர் விஜய் அறிவித்த விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த செய்திகளைத் தேடியபோது, மே 25ஆம் தேதி ‘தினமணி’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது. 


image.png


அதில், கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட 50,000 ரூபாய் வரையிலான பயிர் கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறு விவசாயிகள் 50,000 வரை கடன் பெற்றிருந்தால் அது முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், சிறு விவசாயிகள் 50,000 வரை கடன் பெற்றிருந்தால் 50 சதவீதம், அதாவது 25,000 மட்டும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் 50,000 ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு, கடன் தொகையின் அளவைப் பொறுத்து வெவ்வேறு விகிதங்களில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், தமிழ்நாடு அரசின் ’செய்தி மக்கள் தொடர்புத் துறை’ வெளியிட்டுள்ள ஆவணத்திலும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கியுள்ள பயிர்க்கடனின் அளவைப் பொறுத்து தள்ளுபடி விகிதங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் எங்குமே பயிர்க்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லப்படவே இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது.



அதேபோல், ‘புதிய தலைமுறை’ செய்தி ஊடகம் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த செய்தியில் முன்னுப்பின் முரணான தகவல்களை வெளியிட்டுள்ளது. 

 

முதல்வர் விஜய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது பற்றி ‘புதிய தலைமுறை’ வெளியிட்டுள்ள அந்த செய்தியின் முதல் பகுதியில், ’விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது; செய்தியின் கடைசி பகுதியில் ’குறு விவசாயிகளுக்கு 50,000 வரையில் கடன் தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு 50,000 கடனில் 25,000 தள்ளுபடி’ என்று வேறு விதமாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. 


முடிவு:


பயிர்க்கடன் தொகையின் அளவைப் பொறுத்து சிறு, குறு விவசாயிகளுக்கு வெவ்வேறு விகிதங்களில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை மறைத்து, விவசாயக் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட்டதாக தவறான செய்தியை பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க