
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link
விரிவான விளக்கம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய பேட்டி ஒன்றில், " கொழுந்தியாவின் பொண்ணுக்கு வளைகாப்பு. அதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லவில்லை என ஒரு நிதியமைச்சர் கூறி இருக்கிறார். இதெல்லாம் ஒரு பதிலா " எனப் பேசி இருக்கிறார்.
GST கவுன்சில் கூட்டத்திற்கு வர சொல்லி ஒரு வாரம் முன்புதான் தகவல் சொன்னார்கள்.
அதற்கு முன்பே ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்டதால் GST கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள இயலவில்லை.. pic.twitter.com/8fksJnCZ85
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 19, 2021
அமைச்சர் பி.டி.ஆர் பேசும் வீடியோவில் வளைகாப்பு பற்றி பேசும் பகுதி கூட சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
45வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 17-ம் தேதி லக்னோவில் நடைபெற்றது. ஆனால், அது டெல்லியில் நடந்ததாகவும் தவறாக குறிப்பிட்டு வருகிறார்கள். செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொள்ளாத காரணம் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.
9.40 வது நிமிடத்தில் ஜி.எஸ்.டி கூட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, " சட்டப்படி அனைத்து மாநில உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தே ஆகணும். ஆனால், மிக தாமதமாக வந்தது. நமக்கு இப்போதுதான் ஒரு மாதத்திற்கு மேல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்தது, திருத்திய நிதிநிலை வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க, மானிய கோரிக்கை வைக்கவும். அதனால் என்னால் தொகுதியில் அந்த அளவிற்கு ஈடுபாடு இருக்க முடியாததுனால், நான் அப்பவே செப்டம்பர் 13-ல் முடிந்து விடும் எனும் நம்பிக்கையில் 16-ல் இருந்து 20 வரைக்கும் அடுத்தடுத்து ஒரு நாளைக்கு 3,4 நிகழ்ச்சிகள் என உறுதிக் கொடுத்து விட்டேன். அப்போ இந்த அழைப்பு வரவில்லை. 10-ம் தேதிக்கு பிறகு கூட்டத்திற்கு அழைப்பு வந்தது.
என்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய வேலை இருக்கு. இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் நடக்குது, இங்கு ஸ்மார்ட் சிட்டி ஆய்வு நடக்கிறது... முன்பு கூட்டத்தில் பெரிதாக அஜெண்டாக்கள் இல்லை, ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக கூடுதல் அஜெண்டாக்கள் வருகிறது. அதில் 500 பக்கத்தையும் படித்து நேற்று தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை எழுதி கொடுத்து விட்டேன். புதிதாக சேர்க்கப்பட்ட அஜெண்டாவோட தாமதம், முன்பே வருவதாக உறுதி அளித்த நிகழ்ச்சிகள், இங்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போறோம் " எனப் பேசி இருந்தார்.
தனது தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வருவதாக உறுதி அளித்தது குறித்து அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்ததில் வளைகாப்பு எனக் கூறியதையே உறவினர் வீட்டு நிகழ்ச்சி என தவறாக புரிந்து கொண்டு பரப்பி உள்ளனர். உண்மையில், அது அரசு நடத்தும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
மதுரை மாவட்டம் சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் @ptrmadurai அவர்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கினார் pic.twitter.com/c9tP357K3k
— Office of PTR (@OfficeOfPTR) September 18, 2021
Twitter link | Archive link
பி.டி.ஆரின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், " மதுரை மாவட்டம் சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் @ptrmadurai அவர்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கினார் " எனப் புகைப்படங்கள் உடன் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : பொய் செய்தி பரப்பிய பாஜகவினர்.. திட்டித்தீர்த்த அமைச்சர் பி.டி.ஆர் !
இப்படி பி.டி.ஆர் கூறியதை திருத்தி மற்றும் எடிட் செய்த பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருவதற்கு அவரே காட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், கொழுந்தியா மகளுக்கு வளைகாப்பு என்பதால் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என நிதியமைச்சர் பி.டி.ஆர் கூறியதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது தவறான தகவல். அமைச்சர் பி.டி.ஆர் அப்படி கூறவில்லை, அவர் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பேசியது தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.