யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த உயர்ந்த ரக சைக்கிள்கள் தனியார் அமைப்பின் நிதியுதவியில் குறிப்பிட்ட ஒரு பள்ளிக்கு மட்டும் வழங்கப்பட்டது என்பதை அப்பள்ளியின் தாளாளர் உறுதி செய்துள்ளார்.
பரவிய செய்தி
தவெக ஆட்சியில் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச சைக்கிள், தற்போது தரம் உயர்த்தப்பட்டு New 26T (Mountain Bicycles) ரக சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

விரிவான விளக்கம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2001-2002 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, முதல்வர் விஜய்-ன் அறிவுறுத்தலின் படி, இந்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சாதாரண சைக்கிள்களுக்கு பதிலாக உயர்ந்த ரக New 26T (Mountain Bicycles) வகை சைக்கிள்கள் வழங்கி வருவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
CM Vijay sir Thalapathy govt issued Brand New BiCycles reached govt school children . Thanks to @CMOTamilnadu for this ! pic.twitter.com/EtdjSD7kPi
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவில் பள்ளி வளாகத்தின் வாயில் அருகில் ஒரு பேனர் உள்ளதைக் காணமுடிகிறது. அதன் மூலம் இந்த வீடியோவில் இருப்பது கெங்கபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீபரமேஸ்வர் நினைவு உயர்நிலைப்பள்ளி என்பது தெரிய வருகிறது.

இந்த பள்ளியின் தாளாளரை ‘You Turn’ சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், "இவ்வாறு இலவச சைக்கிள் கொடுக்கும் சேவையை நாங்கள் எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறோம். எங்கள் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் அமைப்பு மூலம் கிடைத்த நிதியுதவியுடன் இவ்வாறு இலவச சைக்கிள்கள் வழங்கியுள்ளோம். இது தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இலவச சைக்கிள் அல்ல” என்றார்.
இதிலிருந்து, இவ்வாறு உயர்ந்த ரக சைக்கிள் வழங்கப்பட்டது தனியார் அமைப்பின் நிதியுதவியில் குறிப்பிட்ட ஒரு பள்ளிக்கு மட்டும் தான் என்பது தெரிய வருகிறது. இதனை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என்பதும் மாநிலம் முழுவதும் வழங்கப்படவில்லை என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
தனியார் அமைப்பு மூலம் ஒரு பள்ளியில் கொடுக்கப்பட்ட இலவச சைக்கிளை, 'தவெக ஆட்சியில் தரம் உயர்த்தி வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள்' என்று தவறாக பரப்புகிறார்கள்.