யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக தலைவர் நடிகர் விஜய் நடத்தும் பள்ளி எனப் பரவக் கூடிய புகைப்படங்கள் தவறானவை.
பரவிய செய்தி
ஒரு அழகான விவசாய கிராமத்தையே அழிச்சிருக்காங்க. இதுல எத்தனை விவசாய குடும்பம் பாதிக்கபட்ருபாங்க. சரி விவசாயத்த அழிச்சி பள்ளிகூடம் கட்டி குறைந்த கட்டணத்துலயாவது கல்வி தருவாங்கனு பாத்தா Pre-KG-கே ஆண்டுக்கு 46 ஆயிரம் கட்டணமாம். பரந்தூர்ல பேசுனதலாம் பொய்யா கோபால் @TVKVijayHQ

விரிவான விளக்கம்
தேசிய கல்விக் கொள்கையின் அனைத்து அம்சங்களையும் அமல்படுத்தாத வரை தமிழ்நாட்டிற்குக் கொடுக்கவேண்டிய சமக்ரா சிக்ஷா நிதியை விடுவிக்க முடியாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரிதான் சமீபத்தில் கருத்துத் தெரிவித்தார். அதாவது மும்மொழிக் கொள்கையையும் ஏற்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்.
ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சுக்கு, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மும்மொழி, இந்தித் திணிப்பு போன்றவற்றுக்கு எதிரான கருத்துகள் மீண்டும் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசுபொருளானது.
இந்த விவகாரத்தையொட்டி, ’மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே’ என்று தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்தார்.
ஒரு அழகான விவசாய கிராமத்தையே அழிச்சிருக்காங்க.
இதுல எத்தனை விவசாய குடும்பம் பாதிக்கபட்ருபாங்க.
சரி விவசாயத்த அழிச்சி பள்ளிகூடம் கட்டி குறைந்த கட்டணத்துலயாவது கல்வி தருவாங்கனு பாத்தா Pre-KG-கே ஆண்டுக்கு 46 ஆயிரம் கட்டணமாம். பரந்தூர்ல பேசுனதலாம் பொய்யா கோபால் @TVKVijayHQ pic.twitter.com/WzhNhBHRG5
இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தவெக தலைவர் விஜய் ”'விஜய் வித்யாஸ்ரம்' என்ற பெயரில் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருகிறார்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். இதனைத் தொடர்ந்து ‘விவசாய கிராமத்தையே அழித்து விஜய் கட்டிய சிபிஎஸ்இ பள்ளி’ என்று புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பாஜக மற்றும் திமுகவினரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் இரண்டு புகைப்படங்களில் முதல் புகைப்படத்தை ’Reverse Image Searching’ முறையில் தேடியதில், ’Drone XL’ என்ற வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தைக் கொண்டு வெளியான கட்டுரை ஒன்றைக் காணமுடிந்தது. ’இங்கிலாந்து நாட்டில் மத்திய காலத்தில் இருந்து பின்னர் அழிந்துபோன ஒரு கிராமத்தின் நிலச் சுவடுகள் Drone மூலமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக’ ஜீன் 2020 -ல் வெளியான இந்த கட்டுரை தெரிவிக்கிறது.

மேலும், இரண்டாவது புகைப்படத்தை ’Reverse Image Searching’ முறையில் தேடியதில், அது ஓசூர் பாகலூர் பகுதியில் இயங்கிவரும் ‘ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம்’ என்ற பள்ளியின் புகைப்படம் என்று தெரியவருகிறது. இந்தப் பள்ளி ‘விஜய் வித்யாஷ்ரம்’ என்ற பெயருடன் குழப்பிக்கொள்ளப்பட்டிருக்கிறது.
தவெக தலைவர் நடத்துவதாகச் சொல்லப்படும் ‘விஜய் வித்யாஷ்ரம்’ பள்ளியின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் தேடிய போது, இந்தப் பள்ளி இயங்கிவரும் நிலம் தவெக தலைவர் விஜய்-ன் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றிதழ் காணக்கிடைத்தது.

மேலும், படூரில் இயங்கிவரும் ‘விஜய் வித்யாஷ்ரம்’ பள்ளியை ’Google Earth’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்தோம். அதன்மூலம், அந்த நிலம் பள்ளி கட்டப்படாத 2015ஆம் ஆண்டில் எப்படியிருந்தது, சென்ற 2024 ஆண்டில் எப்படி இருந்தது என்பதை கீழ்க்காணும் படத்தில் பார்க்கிறோம்.
மேற்கூறிய விவரங்களில் இருந்து, பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது ‘விஜய் வித்யாஷ்ரம்’ பள்ளி அல்ல என்பது தெளிவாகிறது.
முடிவு:
ஓசூர் பாகலூர் பகுதியில் இயங்கிவரும் ‘ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம்’ என்ற பள்ளியின் புகைப்படத்தை தவெக தலைவர் விஜய் நடத்திவரும் ‘விஜய் வித்யாஷ்ரம்’ பள்ளியின் புகைப்படம் என்று தவறாகப் பரப்புகிறார்கள். மேலும், இங்கிலாந்து நாட்டில் மத்திய காலத்தில் அழிந்துபோன கிராமம் பற்றிய புகைப்படத்தை கிராமத்தை அழித்து இந்தப் பள்ளி கட்டப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.