
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை எழுப்பும் பணிகளை மேற்கொண்டனர். 182 மீட்டர் உயரம் கொண்ட பட்டேல் சிலை குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் என்ற அணைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 33 மாதங்களில்...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை எழுப்பும் பணிகளை மேற்கொண்டனர். 182 மீட்டர் உயரம் கொண்ட பட்டேல் சிலை குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் என்ற அணைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 33 மாதங்களில் அமைக்கப்பட்ட பட்டேல் சிலையின் மதிப்பு தோரயமாக 3000 கோடி(2989) எனக் கூறப்படுகிறது.

“ The statue of unity “ என அழைக்கப்படும் இச்சிலையை சர்தார் வல்லபாய் பட்டேலின் 143-வது பிறந்த நாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் வைக்கப்பட்ட பலகையில் “ statue of unity “ என இந்திய மொழிகள், அயல்நாட்டு மொழிகளில் எழுதியுள்ளனர்.

இதில், தமிழ் மொழியில் “ statue of unity “ என்ற வாசகம் “ ஒற்றுமையின் சிலை ” என்பதற்கு பதிலாக “ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி “ என மொழிப்பெயர்ப்பு செய்துள்ளனர். இதற்கு என்ன அர்த்தம் என்று தமிழக மக்கள் குழம்பியும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி, அதிக மக்கள் பேசும் மொழியான தமிழில் சரியாக மொழிப்பெயர்ப்பு செய்யாமல் என்ன மொழி என்று அனைவரும் குழம்பும் வகையில் எழுதியுள்ளனர்.

சாதாரணமாக கூகுள் மொழிப்பெயர்ப்பில் “ statue of unity “ என பதிவிட்டால் “ ஒற்றுமை சிலை “ என்று வந்து விடும். அதைக் கூட முயற்சிக்காமல் பிழையுடன் எழுதியுள்ளனர் என மக்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முதல் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் என செய்திகள், கேள்வி எழுந்ததையடுத்து வளாகத்தில் வைக்கப்பட்ட பலகையில் இருந்த “ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி “ என்பதை மறைக்க முயற்சித்தும் தெளிவாக தெரிகிறது.
தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைத்தள வாசிகள் கண்டனப் பதிவுகளை பதிவிடுகின்றனர். சிறு பலகை என்றாலும் மிகப்பெரிய அளவில் கவனம் பெறும் நிகழ்ச்சியில் பிழையுடன் எழுதியது தவறான ஒன்றே. எனினும், இது முதல் முறை அல்ல. பல இடங்களில் தமிழைத் தவறாக மொழிப்பெயர்ப்பு செய்வதும், குறிப்பாக ஒரே பாரதம் திட்டத்தின் இணையப் பக்கத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது வரை அனைத்தையும் குறிப்பிட வேண்டிய நிலை இங்குள்ளது.
உலகின் உயரமான பிரம்மாண்ட சிலை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக இருந்தாலும், சிலை அமைய உள்ள பகுதி மக்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள 22 கிராமங்களின் கூட்டமைப்பு மூலம் சிலை திறப்பிற்கு வரும் உங்களை வரவேற்கப்போவதில்லை என பிரதமருக்கு கடிதம் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
UPDATE :
சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை அமைக்கப்பட்ட பகுதியின் வளாகத்தில் வைக்கப்பட்ட " statue of unity " வாசகத்தை தமிழில் பிழையுடன் இருப்பதாக வைரலாகிய செய்திக்கு சர்தார் சரோவர் நர்மதா நிகாமின் உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
" statue of unity வாசகம் தமிழில் பிழையுடன் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சிக்கு களங்கம் விளைவிக்க சிலரால் மேற்கொண்ட முயற்சியாகும். உண்மையான பலகையில் சிலையின் லோகோ மற்றும் இந்திய அரசின் திட்டம் என்று இடம்பெற்று இருக்கும் " என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
" ரஷ்யா, ஐரோப்பாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. மேலும், அப்படி ஒரு விளம்பர பலகை வைக்கபட்டால் இந்தியாவின் அனைத்து மொழிகளும் இடம்பெறும் " எனவும் தெரிவித்துள்ளனர்.
உண்மை இல்லையா ?
பட்டேல் சிலை வளாகத்தில் பிழையுடன் இருக்கும் அறிவிப்பு பலகை வைக்கவே இல்லை என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அது உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.
பிபிசி செய்தியாளர் தேஜஸ் வைத்யா அக்டோபர் 30-ம் தேதி பட்டேல் சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றி பார்த்ததோடு அங்கு பல புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில், தவறாக தமிழில் தவறாக மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட பலகையும் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த விளம்பர பலகை அமைக்கும் பணி லார்சன் & டூப்ரோ நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது பலகையை நீக்கி விட்டதாக கூறியுள்ளார்கள். மேலும், அந்த பலகை அகற்றப்படாமல் இருந்தால் அகற்றி விடுவோம் என சரோவர் நர்மதா நிகாமின் இணை மேலாண் இயக்குனர் குஜராத் பிபிசி-யிடம் தெரிவித்து உள்ளார்.
தமிழில் பிழையுடன் பலகையே இல்லை இல்லாத பலகை பற்றி தவறான செய்திகள் பதிவிடுவதாக சிலர் வாதாடி வருகின்றனர். தமிழ் பிழையுடன் இருப்பதற்கு மேலும் ஓர் ஆதாரம் கிடைத்துள்ளது.

" குஜராத் மாநிலத்தின் முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் " statue of unity நாட்டிற்கு அர்பணிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட பல்வேறு படங்கள் என பதில் அந்த பிழையுடன் இருக்கும் பலகையும் இடம்பெற்றுள்ளது " .
"statue of unity " விளம்பர பலகையில் தமிழ் மொழி பிழையுடன் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவே போதுமானவை. தமிழ் மொழி போன்று அரபி மொழியிலும் பிழைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.