
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X link | Archive link
விரிவான விளக்கம்
அப்பதிவுகளில் ‘100 சதவீதம் முஸ்லீம் நாடான எகிப்து காசாவில் உள்ள முஸ்லீம்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட 36 அடி உயரச் சுவரினை, காசா மக்கள் கடக்க முயல்கின்றனர்’ என்றுள்ளது.
100% முஸ்லீம் நாடான எகிப்து, காஸாவிலிருந்து முஸ்லிம்கள் தனது எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்தது. . எந்த முஸ்லீம் அகதிகளும் தங்கள் எல்லைக்குள் நுழைவதை அவர்கள் விரும்பவில்லை. மறுபுறம், முஸ்லிம் அல்லாத நாடுகள் தங்களை இருகரம் நீட்டி ஏற்றுக்கொள்ள வேண்டும் . pic.twitter.com/YR0lbQjzTj
— Sandy (@SandySatv21012) October 18, 2023
Archive link
உண்மை என்ன ?
எகிப்து எல்லையைக் காசா மக்கள் தாண்டுவதாகப் பரவும் படம் குறித்துத் தேடியதில், அது 2021ம் ஆண்டு மே மாதம் இஸ்ரேல் - காசா மீது நடத்திய தாக்குதலுக்கு எதிராக லெபனான் நாட்டினர் நடத்திய போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

2021, மே 16ம் தேதி ‘பாலஸ்தீன எல்லையில் லெபனான்’ எனக் குறிப்பிட்டு ‘hargeisawi’ என்ற டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் பரவக் கூடிய புகைப்படத்தில் இருப்பது போல் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த ஒருவர் சுவரின் மீது ஏறுவதும், பாலஸ்தீன கொடி இருப்பதும் காண முடிகிறது.

அதே போல் 2021, மே 17ம் தேதி ‘CNN Arabic’ யூடியூப் பக்கத்திலும் அதனுடன் தொடர்புடைய வீடியோ ஒன்று கிடைத்தது. அதன் நிலைத்தகவலில் (Description) ‘காசாவுக்கு ஏற்பட்ட நிலைக்கு வருத்தமடைந்த லெபனான் ஆர்ப்பாட்டக்காரர்கள் 25 அடிக்கும் உயரமான கான்கிரீட் சுவர் மீது ஏறி பாலஸ்தீனிய கொடிகளை வைத்தனர்’ என்றுள்ளது.

2021ம் ஆண்டு மே மாதம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு லெபனான் நாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பகுதி சுவர் மீது ஏறியுள்ளனர். அது தொடர்பாக ‘Arab News’ என்னும் தளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘Reuters’ தளத்திலும் உள்ளன.

அப்போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படத்தினைத்தான் தற்போதைய இஸ்ரேல் - ஹமாஸ் போருடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : காசா மக்களுக்குத் தண்ணீர், உணவு கொண்டு செல்லும் எகிப்தியர்கள் எனப் பழைய வீடியோவை பதிவிட்ட மாலை மலர் !
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கு இடையேயான போருடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பாலஸ்தீனர்கள் போரில் காயம் அடைந்தது போல நாடகம் ஆடுவதாகத் தவறாகப் பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !
முடிவு :
நம் தேடலில், காசா பகுதி மக்கள் எகிப்து நாட்டிற்குள் நுழைய எல்லை சுவரினை தாண்டுவதாகப் பரவும் படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல. 2021, மே மாதம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் மக்கள் போராடியபோது லெபனான் - இஸ்ரேல் எல்லையில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.