யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பழனி கோவில் பஞ்சாமிர்தம் செய்ய ஆவின் நெய் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பரவிய செய்தி
திருப்பதிக்கு லட்டுக்கு நெய் supply செய்த AR foods நிறுவனம் யாருடையது என்று பாரீர் ! இதே போல் பழனி திருத்தணி முருகன் கோயிலில் பல கோவில்களுக்கு பிரசாதம் தயாரித்து விற்கும் திராவிடியா திமுக மூலம் contract பெற்றுள்ளதும் இந்த அரேபிய கும்பலே!

விரிவான விளக்கம்
திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக அறிக்கை வெளியானது. இது தமிழ்நாட்டில் இயங்கி வரும் ‘ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ்’ நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட நெய்யில்தான் இந்த கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாகத் திருமலை திருப்பதியின் செயல் அதிகாரி சியாமள ராவ் தெரிவித்திருந்தார்.
இந்த ‘AR foods’ நிறுவனத்தில் முஸ்லிம்கள் உயர் பதவிகளில் பணிபுரிகின்றனர். அதனால்தான் இந்து கோயிலுக்கு அனுப்பிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்றும் இதே நிறுவனத்திடம் இருந்துதான் பழனி மற்றும் திருத்தணி முருகன் கோவிலுக்குப் பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் வாங்கப்படுகிறது என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
‘AR foods’ என்ற நிறுவனம் பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகும். பரவக்கூடிய படத்தில் ‘பாகிஸ்தான், இஸ்லாமாபாத்’ என்கிற வார்த்தைகள் இருப்பதையும் காணலாம். இந்நிறுவனத்துக்கும் திருப்பதி லட்டு விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்த ‘ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ்’ தமிழ்நாடு, திண்டுக்கல்லில் ‘ராஜ்’ என்கிற பெயரில் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதன் உரிமையாளர் பெயர் ராஜசேகர். இவர் பழனி தண்டாயுதபாணி அறங்காவலர் குழுவிலும் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் உயர் பதவியில் இருப்பதாக பரவிய பொய்செய்தி குறித்து இதற்கு முன்னரே யூடர்ன் தளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
பழனி மற்றும் திருத்தணி கோவில்களுக்குப் பஞ்சாமிர்தம் செய்யத் தேவையான நெய் இந்த நிறுவனத்திடம் (ஏ.ஆர். டெய்ரி ஃபுட்) இருந்துதான் வாங்கப்படுகிறது என்பது பொய்.
இத்தகைய பொய் செய்தி பரவியபோதே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியது, “பழனியைப் பொருத்த அளவில் முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது. தேவை அதிகரிக்கும் போது தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிற நெய் கூட தற்போது புகாருக்கு உள்ளாகியுள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படவில்லை”.
இவற்றிலிருந்து ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவன பணியாளர்கள் பற்றியும் பழனி, திருத்தணி பஞ்சாமிர்தம் பற்றியும் பரவக்கூடிய தகவல் தவறானது என்பதை அறியமுடிகிறது. திருப்பதி நெய் விவகாரத்துடன் தொடர்புப்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான பொய் செய்திகள் பரப்பப்படுகிறது.
முடிவு:
திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் உயர் பதவிகளில் முஸ்லிம்கள் இருப்பதாகப் பரவும் தகவல் தவறானது. பரவக்கூடிய தகவலில் உள்ள ‘AR foods’ நிறுவனத்துக்கும் திருப்பதி விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மேலும், பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க ஆவினிடம் இருந்துதான் நெய் வாங்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.