யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.
பரவிய செய்தி
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த ஐந்தாண்டுகளில் 60,000 முதல் 80,000 அரசு பணிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளன - பெலிக்ஸ் ஜெரால்டு
விரிவான விளக்கம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மொத்தமுள்ள 234 தொகுதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள தவெகவைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஐந்தாண்டுகளில் 60,000 முதல் 80,000 அரசு பணிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளன“ என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் பேசியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் அரசு பணிகளின் நியமனங்கள் குறித்து வெளியிடப்பட்டிருந்த அரசு அறிக்கை குறித்த செய்திகளை ஊடகங்களில் காண முடிந்தது.
‘Indian Express’ பக்கத்தில் கடந்த 2024 ஜூன் 25 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தியில், ‘கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 65,483 இளைஞர்கள் அரசுப் பணியில் இணைந்துள்ளனர். பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள 75,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம். ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம். நான் முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதே போன்று ‘கலைஞர் செய்திகள்’ ஊடகப் பக்கத்திலும், “கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம். ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்“ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டது குறித்து கடந்த மார்ச் 15, 2026 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த ஐந்தாண்டுகளில் 60,000 முதல் 80,000 அரசு பணிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளன எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.