யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் விழுப்புரத்தில் உள்ள ஜி ஆர் பி தெருவில் உள்ள குடிசை வீடுகளுக்கு 5000 ரூபாய் வரை மின்கட்டணம் வந்ததையடுத்து மக்கள் புகாரளித்த போது எடுக்கப்பட்டது. அப்பகுதி மின் கணக்கீட்டாளராக உள்ள லட்சுமணன் என்பவர் மின் கட்டண முறைகேட்டில் ஈடுபட்டதே இதற்கு காரணம் என்று அப்போதே கண்டறியப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
விழுப்புரத்தில் குடிசை வீடுகளுக்கு 5000 ரூபாய் வரை மின்கட்டணம் வந்ததையடுத்து பொதுமக்கள் வரிசையாக நியூஸ்7 தமிழ் ஊடகத்திற்கு புகார் அளிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் பெண்கள் பலரும் தாங்கள் ஒரே ஒரு மின் விசிறி, இரண்டு டியூப் லைட்டுகள் மட்டுமே எங்கள் வீடுகளில் பயன்படுத்துவதாகக் கூறுவதைக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் 2023 ஆகஸ்ட் 02 என்று தேதி குறிப்பிடப்பட்டிருந்ததால் சந்தேகம் எழவே, இது குறித்து தேடியதில், இது தொடர்பான வீடியோ கிடைத்தது.
கடந்த 2023 ஆகஸ்ட் 02 அன்று ‘நியூஸ்7 தமிழ்’ யூடியூப் பக்கத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், “குடிசை வீடுகளுக்கு ரூ.5000 மின்கட்டணம் - மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் வெளியிடப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து “சமயம்“ ஊடகப் பக்கத்திலும் கடந்த 2023-ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “விழுப்புரம் நகர பகுதியான ஜி ஆர் பி தெருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூரை வீடு, ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மின்வாரிய சார்பில் வீட்டிலிருந்த பழைய மின் மீட்டர்களை எடுத்துவிட்டு புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின் ஒரே ஒரு மின் விசிறி, இரண்டு டியூப் லைட்டுகள் பயன்படுத்தப்பட்ட குடிசை வீடுகளில் மின் கட்டணம் 500 ரூபாய் கட்டியவர்களுக்கு, இந்த மாதம் 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில் அப்பகுதி மின் கணக்கீட்டாளராக உள்ள லட்சுமணன் என்பவர் மின் கட்டண முறைகேட்டில் ஈடுபட்டதே இதற்கு காரணம் என்பது கண்டறியப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் விழுப்புரத்தில் உள்ள ஜி ஆர் பி தெருவில் உள்ள குடிசை வீடுகளுக்கு 5000 ரூபாய் வரை மின்கட்டணம் வந்ததையடுத்து மக்கள் புகாரளித்த போது எடுக்கப்பட்ட பழைய செய்தி என்பதை அறிய முடிகிறது. இந்நிலையில் 2023-ல் எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது நடந்த சம்பவம் போல பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், "குடிசை வீடுகளுக்கு ரூ.5000 வரை மின்கட்டணம்" என்று பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் நடந்த பழைய சம்பவத்தோடு தொடர்புடையது என்பதை அறிய முடிகிறது
