யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவில் இருக்கும் சம்பவம் 2024-ஆம் ஆண்டு விஜய்-ன் 50-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஜூன் 22ஆம் தேதி தவெக தலைவர் விஜய்-ன் 52ஆவது பிறந்தநாளை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவெகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடினர்.
இந்நிலையில், தவெக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் கையால் செங்கற்களை உடைக்கும் போது, அவரது கையில் தீ பற்றி விபத்து ஏற்பட்ட வீடியோவை பதிவிட்டு, ’இந்த நிகழ்வு இந்தாண்டு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்ததாக’ திமுக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
பிறந்தநாள் பார்த்து கொண்டாடுங்கடா.. pic.twitter.com/xalCzMUNby
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘News 18’ ஆங்கிலச் செய்தித்தளத்தில் 2024 ஜூன் மாதம் வெளியான செய்தி ஒன்றைக் காண முடிந்தது.

அதில், ‘விஜய்-ன் 50-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், 11 வயது சிறுவன் தற்காப்பு கலையை நிகழ்த்திக் காட்டும் வகையில் கையால் செங்கற்களை உடைக்கும் போது அவனது கையில் தீ பற்றி விபத்து ஏற்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ’தினமலர்’ செய்தித்தளம் 2024 ஜூன் மாதம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட விஜய்-ன் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், சிறுவன் கையில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை பற்ற வைத்து ஓடுகளை உடைத்த போது, கையில் பற்றிய தீ அணையாததால் அவன் வலியால் அலறித் துடித்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்த வீடியோவில் இருக்கும் சம்பவம் 2024-ஆம் ஆண்டு விஜய்-ன் 50-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது.
முடிவு:
2024-ஆண்டு விஜய்-ன் 50ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நடந்ததாக திமுகவினர் தவறாக பரப்புகிறார்கள்.
