யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்ததையடுத்து கண்ணீர் விட்டு பேசுவது போன்று பரவும் வீடியோ, கடந்த 2021 தேர்தலின் போது வெளியிடப்பட்ட பழைய வீடியோ ஆகும். இந்த பழைய வீடியோவை ‘சன் நியூஸ்’, ‘மாலை முரசு’ மற்றும் "OneIndia தமிழ்" ஊடகங்களும் தவறாக வெளியிட்டுள்ளன.
பரவிய செய்தி
"மாற்று அரசியல் பேசிய எங்களுக்கு இன்னும் ஒரு 10 லட்சம் வாக்குகளை கூடுதலாக செலுத்தி 8% வாக்குகளை மக்கள் கொடுத்து இருக்க கூடாதா? என்ற வருத்தம் உள்ளது. இந்த தேர்தலில் நான் உட்பட ஒரு 5 பேர் வெற்றி பெறுவோம் என கணித்தேன், நடக்கவில்லை" என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீர் விட்டு பேசியுள்ளார். - மாலை முரசு
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியிடப்பட்ட நிலையில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளார். இதன் மூலம் நாதக வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது.
இந்நிலையில் நாதக வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ள நிலையில், சீமான் "மாற்று அரசியல் பேசிய எங்களுக்கு இன்னும் ஒரு 10 லட்சம் வாக்குகளை கூடுதலாக செலுத்தி 8% வாக்குகளை மக்கள் கொடுத்து இருக்க கூடாதா? என்ற வருத்தம் உள்ளது. இந்த தேர்தலில் நான் உட்பட ஒரு 5 பேர் வெற்றி பெறுவோம் என கணித்தேன், நடக்கவில்லை" என்று கண்ணீர் விட்டு பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
1️⃣ தோல்வி வந்த நாள்… ஆனாலும் தலைவன் தளரவில்லை
2️⃣ கண்ணீருடன் பேசினாலும் — வார்த்தைகள் ஊக்கமாய் இருந்தது
3️⃣ தன்னுக்காக இல்லை… தன் பிள்ளைகளுக்காக பேசும் மனிதன்
4️⃣ தோல்வியிலும் தைரியம் கற்பிப்பது — அதுதான் உண்மையான தலைவர்
5️⃣ இன்று கண்ணீர்… நாளை வரலாறு
அண்ணன் சீமான் —
அழுதும் நம்மை… pic.twitter.com/wdlWSVTV7n
சீமான் பேசியுள்ள இந்த கருத்தை, ‘சன் நியூஸ்’ ஊடகம் நியூஸ் கார்டாகவும் , ‘மாலை முரசு’ மற்றும் "OneIndia தமிழ்" ஊடகங்கள் செய்தியாகவும் வெளியிட்டுள்ளன.
#தேர்தல்POST | "தமிழ்நாட்டு மக்களின் முடிவு வருத்தமாக உள்ளது" - சீமான் #SunNews | #TNElectionWithSunNews | #ElectionResults2026 | #Seeman pic.twitter.com/aeym15bMt7
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘NewsGlitz Tamil’ யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ, “அடுத்த 5 வருஷம் நம்மளோட ஆட்டம்தான் : Seeman Latest Speech About Election Result 2021 | NTK” என்று குறிப்பிட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதமே வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் வீடியோவில் நாதக வேட்பாளர் என்று குறிப்பிட்டு காளியம்மாள் பற்றியும் சீமான் பேசியுள்ளார். இதன் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது தெளிவாகிறது. இதனை தற்போது நடந்து முடிந்த “2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலோடு” ஒப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்ததையடுத்து கண்ணீர் விட்டு பேசுவது போன்று பரவும் வீடியோ, கடந்த 2021 தேர்தலின் போது வெளியிடப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது.