யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து” எனக் குறிப்பிட்டு பரவும் வீடியோ, 2017 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் பழைய வீடியோவை, நவம்பர் 17, 2025 அன்று சவுதி அரேபியாவின் புனித நகரமான மதீனா அருகே நடந்த பேருந்து விபத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

விரிவான விளக்கம்
சௌதி அரேபியாவில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இது தான் விபத்தின் காட்சி என்று கூறி webdunia போன்ற ஊடகப்பக்கங்களிலும், சமூக ஊடகங்களிலும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Fahad Alhazmi என்ற யூடியூப் பக்கத்தில் ”அகபா ஷாரில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார்” என குறிப்பிட்டு ஜூன் 24, 2017 அன்று இந்த வீடியோ பதிவாகியிருந்தது.
இதை குறிப்பாக எடுத்துக்கொண்டு, மேலும் தேடினோம். Okaz. com ஊடகப்பக்கத்தில், ஜூன் 24, 2017 அன்று ”அபாவில் உள்ள அகபா ஷாரில் ஒரு எரிபொருள் டேங்கர் தீப்பிடித்து எரிந்தது, அதன் ஓட்டுநர் எரிந்து இறந்தார்" என்ற தலைப்புடன், பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

அதில் 32 டன் டீசலை ஏற்றிச் சென்ற லாரி, அபா நகரத்தையும் மஹாயில் அசிர் ஆளுநரகத்தையும் இணைக்கும் ஷார் மலைப்பாதையில் ஒன்பதாவது சுரங்கப்பாதைக்கு முந்தைய பாலங்களில் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கர் தீப்பிடித்து எரிந்ததில், உள்ளே இருந்த ஓட்டுநர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதனால் மலை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் சுமார் 70 மீ x 30 மீ பரப்பளவுக்கு தீ விபத்து ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போல் Al Arabiya ஊடகப்பக்கத்திலும் இது குறித்து ஜூன் 24, 2017 அன்று செய்தி வெளியாகியிருந்ததையும் பார்க்கமுடிந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், “சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து” எனக் குறிப்பிட்டு பரவும் வீடியோ, 2017 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது தெரியவந்தது. இந்த பழைய வீடியோவை, நவம்பர் 17, 2025 அன்று சவுதி அரேபியாவின் புனித நகரமான மதீனா அருகே நடந்த பேருந்து விபத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.