யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குழந்தையுடன் வந்ததற்காக அபராதம் விதித்த காவல்துறையினர் என்று கூறி நான்கு நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சிபவனை எல்லாம் இந்த காவல்துறை விட்டுடுது, குழந்தையை எங்க போயி விட்டுட்டு போணும் சார்... இதே கேள்வியை அதிகாரத்தில் இருக்கும் எவனிடமாவது கேட்குமா இந்த காவல் துறை... குழந்தையை அழ வைத்து பெற்றோர்களை அவமானம் செய்வது தான் காவல் துறையின் பணியா?
விரிவான விளக்கம்
குழந்தையுடன் வந்ததற்காக அபராதம் விதித்த காவல்துறையினர் என்று கூறி நான்கு நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் இரண்டு காவலர்கள், இரு சக்கர வாகனத்தில் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வந்த ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், அவர்களுக்கு காவலர்கள் அபராதம் விதிப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2019-ல் இருந்தே பரவி வரும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
அப்பதிவில், “சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் வந்தவரை, சிதம்பரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப் பதிவு செய்தனர். பைக்கில் வந்த குடும்பத்தினர் போலீசாரிடம் குழந்தைகளை காண்பித்து கெஞ்சியும் மனம் இரங்காத போலீசார்“ என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
இது குறித்து மேலும் தேடியதில், மே 15 அன்று பரவி வரும் வீடியோ குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையைக் காண முடிந்தது. அதில், “கடந்த 2019-ல் சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோர் பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். புவனகிரி பகுதியை சார்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களை ஒரே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, 5 கட்ட பைகளை இரு சக்கர வாகனத்தில் மாட்டிக் கொண்டு, போக்குவரத்து சரிசெய்ய போட்டு இருந்த பேரிகார்டில் வந்து மோதியதால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இச்சம்பவத்திற்கு பிறகு காவலர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் 2019-ல் நடைபெற்ற பழைய சம்பவத்தை தற்போது நடைபெற்றது போல பலரும் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல, கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, பலரும் தற்போது நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், குழந்தையுடன் வந்ததற்காக அபராதம் விதித்த காவல்துறையினர் என்று தற்போது பரவி வரும் வீடியோ, கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.