யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான மூன்றாண்டுகள் பழைய செய்தி இது.
பரவிய செய்தி
கும்பகோணம் அருகே திருமணமாகி 5 நாட்களில் சோகம், காதல் திருமணம் செய்த தம்பதி கொலை.


விரிவான விளக்கம்
கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்ற பட்டியல் சமூக இளைஞரை சுர்ஜித் என்ற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து ஆணவக் கொலை குறித்து சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதம் நடந்தது.
இவ்வாறு ஆணவப் படுகொலை பற்றி சமூக வலைத்தளத்தில் பலரும் பேசிவரும் நிலையில், தேவேந்திரன் பழனிசாமி என்ற ஊடகவியலாளர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், ”கும்பகோணம் அருகே திருமணமாகி 5 நாட்களில் சோகம், காதல் திருமணம் செய்த தம்பதி கொலை” என்ற தலைப்புடைய பத்திரிகை செய்தியை பரப்பிவருகிறார்.
— Devendran Palanisamy (@devpromoth) August 2, 2025
மேலும் சிலர், இதே பத்திரிகை செய்தியை பதிவிட்டு, ‘இதில் கொலை செய்யப்பட்ட ஆண் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் பெண் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்றும்’ பரப்பி வருகிறார்கள்.
காதலன் முதலியார் சாதி. பெண் பட்டியல் இனம். வெட்டி கொன்றவர் பெண்ணின் தந்தை.
எந்த தலித் தலைவர்களும் இதுவரை இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
பட்டியல் இனத்தவர், மற்ற ஜாதியினரை வெட்டி கொன்றால் அது ஆணவ கொலையில் வராதா?@thirumaofficial @VCKofficial_ @vckitwingoffi pic.twitter.com/EGu6VlVe0G
உண்மை என்ன?
பரப்பப்படும் செய்தியில் உள்ள தலைப்பை Keywords-ஸாகக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’விகடன்’ செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகியுள்ள இந்த செய்தியில், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியான சரண்யா (24), மோகன் (31) ஆகியோரை சரண்யாவின் அண்ணன் சக்திவேல் (31) அரிவாளால் வெட்டி ஆணவக் கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம், சரண்யாவும் மோகனும் திருமணம் செய்து கொண்ட ஐந்து நாட்களில் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, இந்த செய்தி மூன்று ஆண்டுகள் பழையது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்த செய்திகளைத் தேடியபோது, ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், ஆணவக் கொலை செய்யப்பட்ட சரண்யா பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவியலராக பணியாற்றி வந்ததும் தெரியவருகிறது. மேலும் மோகன் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவருகிறது.

இதிலிருந்து, கொலை செய்யப்பட்ட ஆண் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் பெண் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் பரப்பப்படும் தகவல் உண்மை தான் என்பது தெரியவருகிறது.
முடிவு:
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஆணவக் கொலை பற்றிய செய்தி தற்போது நடந்ததாக சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பப்படுகிறது.