யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சாய்ந்த கட்டிடம். பின்னாளில் இது இடிக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நேபாளம் - திபெத் எல்லையில் சில நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சீனா ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவாகியது. இதில் பலர் உயிரிழந்தனர்.
#நிலநடுக்கம் நேபாள் pic.twitter.com/gsaybQPMoa
இந்த நிலநடுக்கத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘The Mirror’ ஊடகத்தில் வெளியாகி இருந்த செய்தியைக் காண முடிந்தது.

தைவான் நாட்டின் ஹுவாலியன் பகுதியில் 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் சேதமானதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று சுமார் 25 டிகிரி சாய்ந்தது. அப்போது எடுக்கப்பட்டதுதான் இது.

இச்சம்பவம் தொடர்பாக, ‘Down To Earth’ ஊடகத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 1986ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம் 2018ல் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பிற்குப் பிறகு பயன்பாட்டிலிருந்த இக்கட்டிடம் சமீபத்திய நிலநடுக்கத்தில் கீழே விழுவது போல் சாய்ந்து விட்டது.
இக்கட்டிடத்தை இடிக்க உள்ளதாகக் கடந்த ஏப்ரல் 5ம் தேதி ‘News Nine’ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் விடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இடித்த பிறகும் தைவான் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. தைவானில் உள்ள கட்டிடம் நிலநடுக்கத்தில் சேதமானதை, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
நேபாள நிலநடுக்கத்தில் சேதமான கட்டிடம் எனப் பரப்பப்படும் வீடியோ, தைவான் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது. பின்னாளில் இக்கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது.
