
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தமிழ்நாடு (vs) வட மாநிலம். நீட் தேர்வு மையத்தின் பாரபட்சம். தமிழகத்தில் தாலி கழட்டும் கட்டுப்பாடு வடமாநிலத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பிட் அடிக்க சுதந்திரம். தமிழக மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் இதுவே.

Facebook link | archive link

Facebook link | archive link
விரிவான விளக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இடையே இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இம்முறை நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் தொடங்கி நீட் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலைகள் வரை என நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் முதன்மையாக இருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்விற்கு வந்த மாணவியின் தாலியை அகற்ற சொன்னவர்கள், வடநாட்டில் நீட் தேர்வு மையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பிட் அடிக்க சுதந்திரம் என இவ்வீடியோ நிஜத்தின் நிழல் எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து, பதிவிடுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது.
Video archive link
44 நொடிகள் கொண்ட வீடியோவில், தேர்வு அறையில் மாணவர்கள் அமர்ந்து இருக்க ஆசிரியர் ஒருவர் கையில் விடைத்தாள் ஒன்றுடன் வந்து மாணவர் ஒருவருக்கு விடையைக் கூறிக் கொண்டு இருக்கிறார். மற்றொரு மாணவரும் அதை பார்க்க முயல்வதை தடுக்கிறார். இறுதியாக, ஜன்னல் வழியாக வீடியோ எடுக்கப்படுவதை பார்த்த பிறகு கையில் இருந்த தாளை மறைக்கிறார். அந்த மாணவர் ஜன்னலை மூடுவது இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் 44 நொடிகள் கொண்ட வீடியோவின் தொடக்கத்திலேயே, ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜர் பகுதியில் ஆசிரியர் பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு ஏமாற்ற உதவுவதாக இடம்பெற்று இருக்கிறது.

இதுகுறித்து தேடிய போது, 2017-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஹரியானா ஆசிரியர் மாணவர்களுக்கு ஏமாற்ற உதவிய வீடியோ வைரலாகுவதாக இந்தியா.காம் எனும் இணையதள செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2017 மார்ச் 22-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியான 44 நொடிகள் கொண்ட வீடியோவே தற்போது நீட் தேர்வு என தவறாக வைரலாகி வருகிறது. ஜாஜ்ஜர் மாவட்ட கல்வி அலுவலர், வீடியோவில் இடம்பெற்ற ஆசிரியர் பணியில் இருந்து மாற்றப்பட்டதாகவும், அவரின் மீது விசாரணை நடைபெறும் எனக் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :
நம் தேடலில், வடமாநிலத்தில் நீட் தேர்வு மையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பிட் அடிப்பதாக வைரல் செய்யப்படும் வீடியோ 2017-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது மாணவர்களுக்கு ஆசிரியரே ஏமாற்ற உதவிய காட்சி என அறிய முடிகிறது.